தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியாக மாயா, மான்ஸ்டர், மாநகரம் உள்ளிட்ட தனிச்சிறப்பு அம்சங்களை கொண்ட படங்களை தயாரித்த நிறுவனம் ‘பொடன்ஷியல் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோரின் தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘டாணாக்காரன்’.
தமிழ்சினிமாவில் எப்போதுமே போலீஸ் படங்களுக்கு தனி மவுசுதான். அந்த வரிசையில்1998 ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போன்ற திரைக்கதையுடன் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ இதுவரை வெளியான படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருக்கும் என்கின்றனர்.
கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார், நடிகர் விக்ரம் பிரபு. இதற்கு முன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தும். அவருடன் சேர்ந்து படத்தில் நடித்த ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அதோடு தமிழ்சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார், படத்தின் இயக்குநர் தமிழ். இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளரான இவர், முன்னதாக ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து பெருவாரியான பாராட்டுகளைப் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. தமிழ், டாணாக்காரன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தின் போஸ்டர்களும் டீஸரும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் ட்ரெய்லரும், இசையும் விரைவில் வெளியாகவுள்ளது.
அஞ்சலி நாயர் நாயகியாகவும், லால், எம் எஸ் பாஸ்கர், லிவிங்க்ஸ்டன் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் அடுத்த பெரிய வெளியீடாக விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணாக்காரன்’ திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.