’டாணாக்காரன்’ விமர்சனம்.

‘பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், மதுசூதன் ராவ், பாவல் நவகீதன் உள்ளிட்டோர் நடித்துள்ள ’டாணாக்காரன் படம், நேரடியாக ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’  ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

‘டாணாக்காரன்’படத்தினை வெற்றிமாறனின் இணை இயக்குநர் தமிழ், இயக்கி இருக்கிறார். இவர், சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படத்தினில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்தவர், என்பது குறிப்பிடதக்கது.  இந்த படம் எப்படி இருக்கிறது?

கதைகளுக்கு பஞ்சமே இல்லாத ‘துறை’ ன்னு ஒன்னு இருக்குன்னா அது காவல் ‘துறை’ தான். சிரிப்பா, சீரியஸா, சிந்திக்க என எல்லாமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. ‘காவல் துறை’ பற்றி எடுக்கப்படும் பல படங்கள் சொதப்பினாலும், சில படங்கள் தங்களுடைய வருகையை அழுத்தமாக பதிவு செய்து விடும். அப்படி பட்ட படங்களில் ‘டாணாக்காரன்’ படமும் தன்னுடைய வருகையினை அழுத்தமாக பதிவு செய்து, பலரின் பாராட்டினை பெறும் படமாக இருக்கிறது.

எளிய மக்களை கடவுளாக காக்கும் கவலாராக விக்ரம்பிரபு ஆகவேண்டும் என்பது தான் அவருடைய அப்பா லிவிங்ஸ்டனின் ஆசை. இதைப்போலவே பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும், கணவுகளுடனும் காவலர்கள் பயிற்சி பள்ளியில் சேருபவர்கள் எப்படி பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பயிற்சியின் முடிவில் காவலர்களாக வருகிறார்களா? இல்லை உயர் அதிகாரிகளின் ஏவலர்களாக வருகிறார்களா? என்பது தான் டாணாக்காரன் படத்தின் கதை.

இந்த எளிமையான கதைக்கு நேர்த்தியான, விறுவிறுப்பான, அழுத்தமான திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் தமிழ். வலிய திணிக்கப்பட்ட எஃபெக்ட்ஸ், மற்றும் தேவையற்ற காட்சிகள் என எதுவும் இல்லை.

விக்ரம் பிரபு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நேர்மையான, துணிச்சலான இளைஞனாக படம் முழுவதும் ரசிகர்களின் மனதில் நிற்கிறார். அதிகமாக வசனங்கள் பேசவில்லை என்றாலும், முகபாவனைகளின் மூலம் பேசுகிறார். அஞ்சலி நாயர் சம்பந்தப்பட்ட ஒரு சில காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.

ஈஸ்வர மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால்,  இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் மற்றும் காவல் துறையின் உயரதிகாரிகளாக நடித்திருக்கும் அனைவரும் காவல் துறையின் உண்மை முகத்தினை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.

அதேபோல் நேர்மையான அதிகாரிகளாக வரும் போஸ் வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் கையாலாகாதவர்களாக காட்சிப்படுத்தி இருப்பதும் எதார்த்தமான உண்மை. இவர்கள் இருவரும் பேசும் வசனங்கள் வலிமையாக இருக்கிறது.

பெரும்பாலான காட்சிகள் ஒரே லொக்கேஷனலில் படமாக்கப்பட்டிருந்தாலும் சலிப்பு இல்லை. அஞ்சலி நாயர் அவரது தொப்பியில் இருக்கும் சின்னத்தை சரி செய்யும் காட்சி, சில நொடிகள் வந்தாலும் அனைவரும் கவனிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.  ஒளிப்பதிவினை சிறப்பாக கையாண்டிருக்கிறார். இந்தக்காட்சியில் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜின் படத்தொகுப்பும் பாராட்டுக்குரியது.

ஜிப்ரானின் பின்னனி இசை திரைக்கதையோடு கைகோர்த்துச் செல்கிறது. உணர்வுகளை உள்ளூரக்கடத்துகிறது.

போலீஸ் ‘அத்துமீறல்’ எங்கே கற்றுக்கொடுக்கப்படுகிறது? என்ற கேள்விக்கான களமாகவும் ‘டாணாக்காரன்’ இருக்கிறது. மிகப்பெரிய ஒரு சமூக பிரச்சனையை முன்னிறுத்திய இயக்குநர் தமிழை பாராட்டி வரவேற்கலாம்.

விக்ரம் பிரபுவின் திரையுலக வாழ்க்கையில் ‘டாணாக்காரன்’ மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும்.