வீட்டினை சூதாட்ட கிளப்பாக மாற்றிய நடிகர் ஷாம் கைது!

சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் வசித்து வருபவர் நடிகர் ஷாம். இங்கு அவருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் நேற்றிரவு பலர் ஒன்றுகூடி சூதாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல் துறை உதவி ஆனையர் முத்துவேல் பாண்டி தலைமையில், நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் ஷாம் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில்  நடிகர் ஷாம் உட்பட சுமார் 10 க்கும் மேற்பட்டோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் கிளப்புகளில் பணத்திற்கு ஈடாக டோக்கன் வைத்து விளையாடுவதுபோல், விளையாடி வந்ததும் உறுதிபடுத்தபட்டுள்ளது.

இதனையடுத்து நேற்றிரவு  போலீஸார்  நடிகர் ஷாம் உட்பட சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரையும் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய  பணம், சீட்டுக் கட்டுகளும்  பறிமுதல் செய்யபட்டன.

தொடர்ந்து பல நாட்களாக  இரவில் அடிக்கடி  நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள்  என பலர்  இது போன்று சட்டவிரோதமாக ஒன்றுகூடி சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், நடிகர் ஷாம் தனது அடுக்குமாடி குடியிருப்பினை சூதாட்ட கிளப்பை போல் மாற்றியுள்ளதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.