‘தேரே இஷ்க் மெய்ன்’ – விமர்சனம்!

‘டிசீரீஸ்’ மற்றும் ‘கலர் யெல்லோ புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ஆனந்த் எல் ராய், ஹுமான் ஷூ சர்மா ஆகியோர் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘தேரே இஷ்க் மெய்ன்’. இதில் தனுஷ், கிருத்தி சனோன், பிரகாஷ் ராஜ், பிரியன்ஷு பைன்யுலி, டோட்டா ராய் சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிமன்ஷு ஷர்மா, நீரஜ் யாதவ் இருவரும் எழுதியிருக்க, ஆனந்த் எல். ராய் இயக்கியிருக்கிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தனுஷ், முரட்டுத்தனமான இளைஞர். அதே அதே பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி கிருத்தி சனோன். இவர், முரட்டுத்தனமான மனிதர்களை வசப்படுத்துவதுடன் அவர்களை சாதுவாகவும், இயல்பாகவும் மாற்றலாம் என நினைக்கிறார். அதை தனது ஆய்வறிக்கையின் மூலம் நிரூபித்து முனைவர் பட்டம் பெற விரும்புகிறார். இதற்காக எப்போதும் அடிதடி, வன்முறை செய்து வரும் தனுஷை தனது ஆராய்ச்சிக்கு பயண்படுத்திக்கொள்ள முடிவு செய்கிறார். கிருத்தி சனோன், தனுஷை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தனது ஆராய்ச்சியில் வெற்றி பெறுவதுடன், முனைவர் பட்டமும் பெறுகிறார்.

முனைவர் பட்டம் குறித்த ஆராய்ச்சியின் போது தனுஷ், கிருத்தி சனோனை காதலிக்க ஆரம்பித்து விடுவதுடன், அவருடன் இருந்தால் மட்டுமே தனது கோபமும், முரட்டுத்தனமும் கட்டுபடுவதாக நினைக்கிறார். தனுஷின் காதலை ஏற்க மறுக்கும் கிருத்தி சனோன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். இதனால் கடும் கோபத்திற்கு உள்ளாகும் தனுஷ், கிருத்தி சனோன் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார். திருமண வீடு களேபரமாகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் அழுத்தமாக தடம் பதித்திருக்கும் தனுஷ்,  இந்தப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான, அழுத்தமான நடிப்பினை வெளிப்படுத்துகிறார். இந்திய விமானப்படையில் முக்கிய விமானியாகவும், கல்லூரி படிக்கும் காலத்திலும் சிறப்பு கவனம் பெறும் அவர், ஏகப்பட்ட காட்சிகளில் கைதட்டல் பெற்று ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார். குறிப்பாக, நீண்ட வருடங்களுக்குப்பிறகு, லே-வில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் அவரும் கிருத்தி சனோனும் சந்திக்கும், குளோசப் காட்சியில் அவர் காட்டும் முகபாவனை மிகச்சிறப்பு. பல காட்சிகளில் ரஜினிகாந்தின் ஸ்டைல். இயக்குநர் விருப்பத்திற்காக நடித்தாரா? தெரியவில்லை!

கிருத்தி சனோன், தனுஷூடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்று விட்டார். என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஃப்ரேமும் அவருடைய நடிப்பினை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

பிரகா‌ஷ்ராஜ், பிரியன்ஷு பைன்யுலிவ், டோட்டா ராய் சவுத்ரி உள்ளிட்டோரது நடிப்பும் ரசிக்கும்படியே இருக்கிறது.

பிரம்மாண்டமான மேக்கிங்குடன், கதாபாத்திரங்களும் திரைக்கதை வடிவமைப்பும் நேர்த்தியாக இருப்பதால் படம் உயிரோட்டத்துடன் இருக்கிறது. தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் பார்வையில் காதல் குறித்த அவர்களது இருவேறுவிதமான பார்வை படத்தின் பலம். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.

ஏ ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். அது காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. முக்கியமாக உணர்ச்சிகரமான காட்சிகளில், பின்னணி இசையின் பங்கு மிகப்பெரிது.

ஒளிப்பதிவாளர் துஷார் காந்தி ராயின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.

அதே சமயம், சில காட்சிகள் பலவீனமாகவும் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானல், க்ளைமாக்ஸில் இடம்பெறும், டெலிவெரி காட்சி. தனுஷ் பஸ்ஸையும், டிரைவரையும் அடிக்கும் காட்சி, மத்திய அரசின் உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் கிருத்தி சனோனின் வீட்டுக்குள், தனுஷ் எளிதாக நுழைந்து பெட்ரோல் பாம் போடும் காட்சிகள். போன்றவைகளை சொல்லலாம்.

மொத்தத்தில், ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், ரசிகர்களுக்கு மாறுபட்ட வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.