‘தாய் கிழவி’ – விமர்சனம்!

‘பேஷன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ SK புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், தாய்க்கிழவி. இதில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனீஷ்காந்த், இளவரசு , ரேச்சல், வேட்டை முத்துக்குமார் , ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஊருக்குள் வட்டித்தொழில் செய்துவரும் மூதாட்டி, பவுனுத்தாய். வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பித் தராதவர்களை, ஆண், பெண் வயது வித்தியாசமின்றி காது கூசும் வார்த்தைகளால் விலாசித் தள்ளி வசூல் செய்பவர். அவரைக்கண்டால் யாருக்குமே பிடிக்காது. இப்படியான சூழலில், பக்கவாதம் ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலை ஏற்படுகிறது. அவரது மூன்று மகன்கள் உட்பட, ஊர் மொத்தமும் அவர் சாவை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பவுனுத்தாயை பார்க்க வரும் நகைக்கடைக்காரர், பவுனத்தாயிக்கு 160 சவரன் சொந்தமாக இருப்பதாக அவரது மகன்களிடம் கூறுகிறார். அந்த நகையை கைப்பற்ற மகன்கள் முடிவு செய்ய, இன்னொரு புறம் மருமகனும் முயற்சிக்கிறார். பவுனுத்தாய் நிலை என்ன ஆனது? நகைகள் கிடைத்ததா? என்பதே ’தாய் கிழவி’ படத்தின் மீதிக் கதை.

மதுரை, சோழவந்தான் பகுதியிலிருக்கும் ஒரு கிராமத்தில் கதை நிகழ்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. படம்பிடிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. அந்த கிரமத்துக்குள் சென்று வருவது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. காலையில் எழுந்து வட்டி வசூல் செய்யக் கிளம்பும் பவனுத்தாயின் களேபரம். ராதிகா சரத்குமாரின் ஒப்பனை கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தாலும் ஓகே தான். பவுனுத்தாய் கதாபாத்திரம், அவரது நடிப்புக்கு சவால் விடும் கதாபாத்திரம் இல்லை. மிகைபடுத்தப்பட்ட அவரது கதாபாத்திரமும், உடல்மொழியும் சிலருக்கு பிடிக்காமலும் போகலாம்.

பவுனுத்தாயின் மகன்களாக சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் நடித்துள்ளனர். இவர்களில் சிங்கம் புலி, வெறிபிடித்த கமல்ஹாசன் ரசிகராக நடித்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, கமல்ஹாசன் படத்தில் இடம் பெறும் பாடல்களை தனது சவுன்ட் சர்வீஸ் மூலம் ஒலிக்கச் செய்து இடைவிடாத சிரிப்பினை ஏற்படுத்துகிறார்.

பவுனுத்தாயின் ஒரே மகளாக நடித்துள்ள ரேச்சலும் கவனம் ஈர்க்கிறார். முனீஷ்காந்த், இளவரசு , வேட்டை முத்துக்குமார் , ஜார்ஜ் மரியான் போன்றோரும் கவனம் ஈர்க்கும் படி நடித்துள்ளனர். கருப்புசாமியிடம் வேண்டுதல் மிரட்டல் விடும் நடிகரும் கவனம் ஈர்க்கிறார்.

கதைக்களத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை சிறப்பாக செய்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார். அதேபோல் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையும் நன்றாகவே இருக்கிறது. பாடல்கள் முழுமையற்று, துண்டு துண்டுகளாக இடம் பெறுகிறது. அதில் கருமாத்தூர் மணிமாறன் எழுதிய ‘தாய்க்கிழவி வர்றா’ பாடலும், ஜெகன் கவிராஜ் எழுதிய ‘கிழக்கு சீமை கிழவி’ பாடலும் கவனம் பெறுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிவகுமார் முருகேசன், பவுனுத்தாயின் கதாபாத்திரத்தை சரியாக வடிவமைக்காதது போல் இருக்கிறது. பெண்களின் முன்னேற்றம், சுயமரியாதை, உழைப்பு, தனித்து யார் உதவியும் இல்லாமல் வாழ வலியுறுத்தி பேசும் அதே நேரத்தில், பெண்களை இழிவாக பேசி வட்டி வசூலிப்பது, அடாவடி கந்து வட்டிக்காரர் மாதிரியாக வசூல் செய்வதும் முரணாக இருக்கிறது. வட்டி வசூலுக்காக குழந்தையின் கையில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை பிடிங்கிச்செல்லும் அளவுக்கு எதற்காக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. என்று தெரியவில்லை. உழைப்பின் மேன்மை குறித்து பேசாதது ஏமாற்றம். இருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சி, பெண்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக இருப்பது ஆறுதலாக இருக்கிறது.

தாய் கிழவி – சிரிப்புகளுக்கிடையே அறிவுரை!