‘தடை அதை உடை’ – விமர்சனம்!

‘காந்திமதி பிக்சர்ஸ்’  சார்பில், அறிவழகன் முருகேசன் தயாரித்து, இயக்கியிருக்கும் திரைப்படம், ‘தடை அதை உடை’. இதில் அங்காடித் தெரு மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தங்கப்பாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டன் இருவரும் ஒளிப்பதிவினை செய்துள்ளனர். சாய் சுந்தர் இசையமைத்துள்ளார்.

‘தடை அதை உடை’ திரைப்படம், 1990 களில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவரின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. எப்படி இருக்கிறது?

அறிமுக இயக்குநரான அறிவழகன் முருகேசன், முழுக்க முழுக்க சினிமா மீது கொண்டுள்ள தீவிர பற்று காரணமாக, இந்தப்படத்தினை தயாரித்து இயக்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் குணா பாபு, தயாரிப்பாளரிடம் ஒரு உண்மை சம்பவத்தினை கூறுகிறார். அது தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்காததால் நிராகரிக்கிறார். அதனால், அவர் வேறு ஒரு கதையை கூறுகிறார். அதுவும் நிராகரிக்கப்படுகிறது. மீண்டும் கதை சொல்ல முயற்சிக்கிறார். குணா பாபு, இயக்குநர் ஆனாரா, இல்லையா? என்பது தான், ‘தடை அதை உடை’ படத்தின் கதை.

படத்தின் தயாரிப்பாளரான அறிவழகன் முருகேசனே இயக்குநராக இருப்பதால், அவரது நோக்கம்போல் படம் இயக்கியிருக்கிறார். இவர், ஏற்கனவே குறும்படத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர். என்றாலும், திரைப்படத்திற்கான நேர்த்தி இல்லாதது. படத்திற்கு பின்னடைவு. கொத்தடிமைகளாக மாற்றப்படும் மனிதர்கள். சமூக வலை தளங்களால் வீணடிக்கப்படும் நேரம். இவற்றை மைய்யப்படுத்தி, அதனால் ஏற்படும் இழப்புகளை காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

வலை தளங்களில் ஏற்பட்ட அசூரத்தனமான வளர்ச்சியால், இனிமேல் இந்த சமுதாயத்தில் யூடியூபர்கள்-  சப்ஸ்கிரைபர்கள் என்ற இரண்டு பிரிவினர் மட்டுமே இருப்பார்கள்’ என்ற வசனம், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

‘தடை அதை உடை’ என்ற தலைப்புக்கேற்றபடி, கொத்தடிமை கூட்டத்திலிருந்து பள்ளிக்கு படிக்கச் செல்லும் சிறுவனின் கதை, மனதை கனக்கச்செய்கிறது.  அனேக வன்முறைக்காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

மகேஷ், குணா பாபு உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கவனம் பெறுகிறார்கள்.

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இயக்குநர் அறிவழகன் முருகேசனை பாராட்டலாம்.