முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்..,
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது..,
இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார், நவீன், அஜய் சர்மா, கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி. என்றார்.
நடிகர் சமுத்திரகனி பேசியதாவது..,
ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். என்றார்.
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரகனி, சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.