‘தலைவன் தலைவி’ – (விமர்சனம்) புரோட்டா பிரியர்களுக்கானது!

இளம் தலைமுறையினரிடம் அதிகமாக காணப்படும் ஒரு பிரச்சனை, விவாகரத்து. இயக்குநர் பாண்டிராஜ், அந்தப் பிரச்சனையையும், பிரச்சனைக்கான தீர்வினையும் சொல்ல முயற்சித்திருப்பது தான், ‘தலைவன் தலைவி’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்.

கதைக்களம் மதுரை, மேலூர். இங்கு விஜய் சேதுபதி ஒரு சிறிய ஓட்டலை நடத்தி வருகிறார். அவரது வீட்டினர் ஒரு சில பொய்களை சொல்லி, நித்யா மேனனை விஜய்சேதுபதிக்கு நிச்சயம் செய்கிறார்கள்.  ஆனால், நித்யா மேனனின் அண்ணனான ஆர்.கே.சுரேஷூக்கு இது பிடிக்கவில்லை, திருமணத்திற்கு மறுக்கிறார். நிச்சயதார்த்தத்திற்கு பிறகு நித்யா மேனன் – விஜய் சேதுபதி  இருவரும் நெருங்கி பழகி விடுவதால், நித்யா மேனனின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடக்கிறது. மனைவியின் மீது அளப்பறிய பாசத்தை கொட்டுகிறார், விஜய் சேதுபதி. வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருக்கும்போது, விஜய் சேதுபதியின் அம்மாவும், தங்கச்சியும் சேர்ந்து,  நித்யா மேனனிடம் பிரச்சனையை உருவாக்குகின்றனர். அது வளர்ந்து, இரு குடும்பத்தினரிடையே அடிதடி வரை போய் விடுகிறது.  கணவன், மனைவி இருவரும் பிரிந்து விடுகின்றனர். மீண்டும் அவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா? என்பது தான், இப்படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

கணவன் மனைவியாக நடித்திருக்கும், விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் போட்டி போட்டு, கத்தி.. கத்தி..,  ஓவராக்டிங் பண்ணியிருக்கிறார்கள். இப்படி, இவர்கள் படம் முழுவதும் வருவது சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஒரு சில காட்சிகளைத் தவிர அனைத்து காட்சிகளிலும் மிகையான நடிப்பை கொடுத்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு பரவாயில்லை.

ஆகாச வீரனின் மனைவி பேரரசி, என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், நித்யா மேனன். ஏனோ அவரது நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை!

சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்க்கும் யோகி பாபு தான் படத்தை காப்பாற்றியிருக்கிறார். துவண்டு கிடக்கும் ரசிகர்களை, தனது அதிரடி வெடிச்சிரிப்பு பஞ்சுகளை தூவியிருக்கிறார். அவர் வரும் அனைத்து காட்சிகளுமே சிரிப்பினை வரவழைக்கிறது.

சரவணன், தீபா சங்கர், செம்பன் வினோத், ஜானகி சுரேஷ், ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், ‘மைனா’ நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் என அனைவருமே ஓகே!

சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் ஒரு பாடல் தாளம் போட வைக்கிறது.  பின்னணி இசை காட்சிகளுக்கேற்றபடி இல்லை. விஜய் சேதுபதி கத்துவதுடன் சேர்ந்து கத்துகிறது.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு பளிச்!

எழுதி, இயக்கியிருக்கும் பாண்டிராஜ், அழுத்தமாக சொல்ல வேண்டிய நல்ல கதையை, வேண்டா, வெறுப்பாக சொல்லியிருக்கிறார். வித விதமான புரோட்டோ வகைகளை காட்சிப்படுத்துவதில் முனைப்பு காட்டிய அவர், திரைக்கதையில் முனைப்பு காட்டியிருக்கலாம்.

மொத்தத்தில், ‘தலைவன் தலைவி’, – புரோட்டா பிரியர்களுக்கானது!