‘தலைவர் தம்பி தலைமையில்’ –  (விமர்சனம்!) கொண்டாட்டம்!

ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தினை, ‘கே ஆர் குரூப்’ நிறுவனத்தின் சார்பில், கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

ஒரு சின்ன கிராமம்.  ஜீவா, அந்த கிராமத்தின் இளம் பஞ்சாயத்து தலைவர், கிராமத்தினரின் அனைத்துவிதமான நிகழ்வுகளுக்கும் சென்று வருபவர். இளவரசுவும், தம்பி ராமையாவும் அந்த கிராமத்தில் அருகருகே வசிக்கும் குடியிருப்பு வாசிகள். இருவருக்கும் முன் பகை.  இதனால், ஒருவர் மீது ஒருவர் தீராப் பகையுடன் இருந்து வருகிறார்கள்.

இளவரசுவின் மகள் பிராத்தனாவுக்கு விடிந்தால் கல்யாணம். வீட்டிலேயே கல்யாணத்தை நடத்த முடிவு செய்து, அதற்கான கொண்டாட்டங்கள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்நிலையில், தம்பி ராமையாவின் அப்பா, திடீரென்று இறந்து போகிறார். சும்மாவே சண்டையிடும் தம்பி ராமையா விடுவாரா? முகூர்த்தம் நடக்கும் அதே நேரத்தில் இறுதி சடங்குகளை செய்ய முடிவெடுக்கிறார். கல்யாண வீட்டினர் கடும் அதிர்ச்சியடைகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க ஓடோடி வருகிறார், பஞ்சாயத்து தலைவர் ஜீவா. பிரச்சனையை தீர்க்க வந்த அவர் மீது ஒரு பழி விழுகிறது. அது என்ன? இளவரசு, தம்பி ராமையா இருவரின் பகை தீர்ந்ததா? இதன் பிறகு என்ன நடந்தது. என்பதை, ஒரு சின்ன மெசேஜுடன், கலகலப்பாக சொல்லியிருப்பது தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’.

ஜீவா, பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரத்தில், நடித்திருக்கிறார். அவர் தம்பி ராமையா, இளவரசு இருவருக்குமிடையே மாட்டிக்கொண்டு தவிப்பது பாவமாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது. உணர்வுகளை கொட்டி நடிக்கக்கூடிய கதாபாத்திரம் இல்லை. ஆனால், ரசிக்கும்படி நடித்துள்ளார். மீண்டும் ஜாலியான ஜீவா திரையில் தோன்றியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும்.

தம்பி ராமையா, இளவரசு இருவருமே தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார்கள். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை. என்பதை நிரூபிக்கிறார்கள். இருவருடைய சண்டை, நம்மை சிரிக்க வைத்திருக்கிறது.

ஜென்சன் திவாகர் உள்ளிட்ட மொத்த நக்கலைட்ஸ் டீமும், யுடியூப் பிரபலங்களும் சிரிக்க வைக்கிறார்கள்.

படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார், பப்லு அஜு. விஷ்ணு விஜய், இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது.

ஒரு சின்ன கதைக்கு,  இயக்குநர் நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ், ஓ.பி சஞ்சோ ஜோசப் ஆகியோர், ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். திரைக்கதை நகைச்சுவையாக நகர்த்தப்பட்டிருந்தாலும், சிந்திக்க வைக்கும் சில விஷயங்கள் பாராட்டுக்குரியது.

‘தலைவர் தம்பி தலைமையில்’ – பொங்கல் கொண்டாட்டம்!