சாய் தேவானந்த், சாய் வெங்கடேசன், பா ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், தண்டகாரண்யம். எழுதி இயக்கியிருக்கிறார், அதியன் ஆதிரை. இதில் தினேஷ், கலையரசன், ஷபீர் கல்லரக்கல், பால சரவணன், ரித்விகா, வின்ஷூ சாம், அருள்தாஸ், வேட்டை முத்துக்குமார், யுவன் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பிரதீப் காளிராஜா. இசையமைத்திருக்கிறார், ஜஸ்டின் பிரபாகரன். உமாதேவி, தனிக்கொடி இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஶ்ரீ கிருஷ் நடனம் அமைத்திருக்கிறார். ஸ்டன்னர் சாம், A.S.சுதேஷ்குமார், PC ஸ்டண்ட்ஸ் ஆகிய மூவரும் சண்டைப் பயிற்சியினை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகா – தமிழ்நாடு எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில், மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தினேஷ், அவரது மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா என அருகருகே ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர். தினேஷ், சமூக செயல்பாட்டாளராக அங்கு வாழும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். கலையரசன், தற்காலிக வனத்துறை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வனத்துறை அதிகாரி அருள்தாஸ் மற்றும் வேட்டை முத்துக்குமார் இருவரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் விதத்தில், வனத்துறையை சார்ந்த உயரதிகாரிகளுக்கு தினேஷ் தகவல் கொடுக்கிறார். அதனால், வேட்டை முத்துக்குமார் மற்றும் அருள்தாஸ் இருவரும் தண்டிக்கப்படுகிறார்கள். இதற்கு பழிவாங்கும் விதமாக கலையரசனின், தற்காலிக வனத்துறை பணி பறிக்கப்படுகிறது. இதனால், ஒட்டு மொத்த குடும்பத்தின் அரசுப் பணி கனவு கலைகிறது.
இந்நிலையில், தனியார் ஆளெடுப்பு நிறுவனத்தின் மூலமாக, தானாக முன்வந்து சரணடையும் நக்சலைட்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட, சிறப்பு பிரிவு படையில் கலையரசன் சேர்கிறார். அங்கே, ஷபீர் கல்லரக்கல் நட்பு கிடைக்கிறது. பயிற்சி முடிந்த நிலையில், ஷபீர் கல்லரக்கலையும் அவருடன் பயிற்சி பெற்ற சிலரும் நக்சலைட்டுகளாக சித்தரிக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். இதை அறிந்து கொண்ட கலையரசன் அங்கிருந்து தப்பிச்செல்ல முடிவெடுக்கிறார். அது நடந்த்தா, ஷபீர் கல்லரக்கல் ஏன் கொல்லப்பட்டார். என்பது தான் தண்டகாரண்யம்.
நேபாளத்தின் பசுபதிநாத் கோவில் பகுதியில் தொடங்கி, ஆந்திர மாநிலத்தின் எல்லைப்பகுதியான திருப்பதி வரையிலான காடுகளே நக்சலைட்டுகள் உலாவும் காடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதிகளே தண்டகாரண்யம் என அழைக்கப்படுகிறது. இங்கு சில, வெவ்வேறு இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1960களில், விவசாயி மக்களான இவர்களே நக்சலைட்டுகளாக உருவெடுத்தனர்.
எழுதி இயக்கியிருக்கும் அதியன் ஆதிரை, இந்திய சினிமாவில் இதுவரை வெளிவராத ஒரு சம்பவத்தினை சொல்லியிருக்கிறார். அதாவது 2009 ஆண்டில், நக்சலைட்டுகளின் கை ஓங்கியிருந்த காலத்தில், பத்திரிகைகளில் வெளியான ஒரு செய்தியை அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் திரைப்படமாக்கியிருக்கிறார்.
சிலரின் அரசியல் சுயலாபத்திற்காக எப்போதுமே பாதிக்கப்படுவது எளிய மக்கள் தான். அந்த எளிய மக்களின் வலியை, கலையரசனின் வாயிலாகவும் அவர் குடும்பத்தினரின் வாயிலாகவும் சொல்லியிருக்கிறார், அதியன் ஆதிரை. அதிகாரம் படைத்தவர்கள், எளியவர்கள் மீது திணிக்கப்படும் வன்முறையே, அவர்களை பின்னாளில் போராளிகளாக உருவெடுக்கத்தூண்டுகிறது. அதை, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி தினேஷ் வாயிலாக சொல்லியிருக்கிறார்கள்.
அண்ணன் – தம்பியாக நடித்திருக்கும், தினேஷ் மற்றும் கலையரசன் இருவருமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறிப்போயிருக்கிறார்கள். தினேஷின், பாவனைகள் அசரவைக்கிறது. துப்பாக்கியைப் பிடித்து சுடும் காட்சி, சூப்பர். இந்தப்படத்தில் மிகச்சிறப்பான முறையில் நடித்திருக்கிறார்.
கலையரசன், காதலியை விட்டுப்பிரிந்த சூழலில் எப்படியாவது பயிற்சியை முடித்துவிட்டு வீடு சேரத்துடிப்பதும், அடுத்ததாக தன் உயிர் போகப்போகிறது. என அஞ்சியபடியே தப்பிக்க வழி தேடும்போதும் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.
ஷபீர் கல்லரக்கல், பால சரவணன், ரித்விகா, வின்ஷூ சாம், அருள்தாஸ், வேட்டை முத்துக்குமார், யுவன் மயில்சாமி உள்ளிட்டவர்களும், அவ்ர்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
‘தண்டகாரண்யம்’ – பார்க்க வேண்டிய படம்!