கிடாரிப்பட்டி, ஒரு வில்லங்கமான கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த கிஷோரின் ‘அப்பத்தா’ தங்கப் பொண்ணு (ரோகிணி). திடீரென ஒரு நாள் அப்பத்தா காணாமல் போகிறார். கிஷோர் அவரை கண்டுபிடித்து தருமாறு, அந்த ஊரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறான். ஓய்வு பெற, சில நாட்கள் இருக்கும் நிலையில் காண்ஸ்டபிள் சுப்பிரமணி (பசுபதி) அவரை தேடுகிறார். பல இடங்களில் தேடிய பின்னர் கிஷோரின் அப்பத்தா (ரோகிணி) கிடைக்கிறார். ஆனால் கிடைத்த சில நிமிடங்களில், இறந்தும் போகிறார்.
பசுபதியிடம், கிஷோர் தனது அப்பத்தாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை, இருக்க வேண்டுகிறான். அவனின் விருப்பப்படி இறுதிச் சடங்குகள் நடந்து வரும் நிலையில் அப்பத்தாவின் காதில் இருந்த ‘தண்டட்டி’ காணாமல் போகிறது. எளவு வீட்டில் பெரும் பிரச்சனை உருவாகிறது. அப்பத்தாவின் (ரோகிணி) குடிகார மகன் (விவேக் பிரசன்னா), பசுபதியை சிறைபிடிக்கிறான். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘தண்டட்டி’ திரைப்படத்தின் சுவாரசியமான திரைக்கதை.
தங்கப்பொண்ணு, என்ற கதாபாத்திரத்தில் அப்பத்தாவாக நடித்திருக்கும் ரோகிணி, உயிருடன் இருக்கும் ஒரு சில காட்சிகளிலேயே, தனது அனுபவமான நடிப்பினை வெளிப்படுத்தி விடுகிறார். “தங்கப்பொண்ணு’ என கூப்பிட்டவுடனேயே அவர் திரும்பி பார்க்கும் அந்த காட்சியே அதற்கு சாட்சி!
காண்ஸ்டபிள் சுப்பிரமணி கதாபாத்திரத்தில் பசுபதி, முழுப்படத்தினையும் தனது தோள்களில் தாங்கிச்செல்கிறார். எளவு வீட்டில் காப்பி கேட்டு அலப்பறை செய்யும் ஆசாமி, ஒப்பாரியிலேயே நக்கல் செய்யும் கிழவிகள், கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டும் விவேக் பிரசன்னா உள்ளிட்டோரிடம் அவர் படும் இம்சை, வெடிச்சிரிப்பினை ஏற்ப்படுத்துகிறது.
ரோகிணியின் குடிகார மகன் கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பியிருக்கிறார், விவேக் பிரசன்னா. படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் இவரது நடிப்பு. அசல் குடிகாரனாகவே தென்படுகிறார். போதையில் நிற்க முடியாமல், அவர் ஆடும் ஆட்டமும், வட்டார பாஷை பேசும் விதமும் சூப்பர்.
அம்மு அபிராமி, சில காட்சிகளில் வந்தாலும் மனம் நிறைந்த நடிப்பினை தந்துள்ளார்.
மற்றபடி, ரோகிணியின் மகள்களாக நடித்திருக்கும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோரும் கிராமத்து மனிதர்களாக நடித்திருக்கிறார்கள்.
கோளாறு பாட்டியின் ‘சேட்டை’ கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் ரசிக்கலாம்.
கதைக்கும், திரைக்கதைக்கும் மகேஷ் முத்துசுவாமியின் இயல்பான ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே!
போலீஸாரே பயப்படுமளவிற்கு கிடாரிப்பட்டியை சித்தரித்து இருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு வொர்த் இல்லை!
ஒரு சில எளவு வீடுகளில் நடக்கும், சொத்து சண்டையின் இடையே அழகான காதலை சொன்ன இயக்குநர் ராம் சங்கையா, காதலை இன்னும் கொஞ்சம் வலிமையாக சொல்லியிருக்கலாம்.
‘தண்டட்டி’ – அப்பத்தாவின் காதல்!