‘TN 2026 – தங்க நட்சத்திரம்’ –  (விமர்சனம்.) ஜொலிக்கிறது!

‘கண்ணன் ரவி குரூப்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், கண்ணன் ரவி தயாரித்து, உமாபதி எஸ். ராமையா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், TN 2026 – தங்க நட்சத்திரம்’. கதை, திரைக்கதை எழுதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், தம்பி ராமையா. இசை: தர்புகா சிவா, ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா.

நாயகனாக நட்டி நட்ராஜ்.  அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஸ்ரீத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமிழகத்தின் 17வது சட்டப் பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச முயற்சி, விஜய் அரசியல் வருகை குறித்த அனைத்தையும் நக்கலாகவும், நையாண்டியாகவும் சொல்லியிருக்கும் திரைப்படம் தான், இந்த ‘TN 2026 – தங்க நட்சத்திரம்’. இது ரசிகர்களை ஆராவாரம் செய்து ரசிக்க வைக்கிறது. அரசியல் தெரிந்த அனைவருமே ரசிப்பார்கள்.

தமிழ் பேசத்தெரியாத நடிகர் (நட்டி நட்ராஜ்) குல்கந்த் குமார். இவர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகன். ரசிகர்கள் இவரை அடுத்த எம்ஜிஆராக பாவித்து வருகின்றனர். இந்நிலையில் படபிடிப்பிற்காக பொள்ளாச்சி வரும் குல்கந்த் குமாருக்கு, எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மிகப்பெரிய (தம்பி ராமையா) ஜமீந்தாரின் நட்பு கிடைக்கிறது. குல்கந்த் குமாருக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதில் இருந்து அவரது நடை உடை பாவனை அனைத்தையும் மாற்றுகிறார், ஜமீந்தார். இதன் காரணமாக சூப்பர் ஸ்டாராகிறார், குல்கந்த் குமார். அடுத்தகட்டமாக குல்கந்த் குமாரை முதல்வராக்க திட்டமிடுகிறார், ஜமீந்தார். முதல்வரானாரா? என்பதுதான், இந்தப் படத்தின் கலகலப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

குல்கந்த் குமாராக நடித்திருக்கும் நட்டி நடராஜ், இந்தப்படத்திற்கு வெகு பொருத்தமாக இருக்கிறார். தப்புத்தப்பாக அவர் தமிழ் பேசும் ஸ்டைலே தனி!  நாயகியிடம் அவர் பேசும் வசனம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. உச்ச நடிகரான பின்னர் அவருக்குள் ஏற்படும் அரசியல் ஆசையை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இந்த குல்கந்த் குமாருக்காக இன்னொரு முறை இந்தப்படத்தை பார்க்கலாம்.

பேசுறது எல்லாம் எம்ஜிஆர் மாதிரி. ஆனால் செய்றது பூராம் நம்பியார் மாதிரியான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா. சும்மா தெறிக்க விடுகிறார். எம். எஸ் பாஸ்கர் மற்றும் இளவரசு, கூடுதல் சிறப்பு செய்கிறார்கள். ஸ்ரீத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் , ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி, கிடைத்த காட்சிகளில் தனியாக ஸ்கோர் செய்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, குபீர் சிரிப்பினை வரவழைக்கிறார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும், தர்புகா சிவாவின் இசையும் படத்திற்கு பெரிதும் துணை நிற்கிறது.

தம்பி ராமையாவின் கதை, திரைக்கதைக்கு ஏற்றபடி இயக்கியிருக்கிறார், இயக்குநர் உமாபதி ராமையா. இருவரும், ரசிகர்களை இடைவிடாது சிரிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர்!

‘TN 2026 – தங்க நட்சத்திரம்’ – ஜொலிக்கிறது!