‘லெஜெண்ட்’ – விமர்சனம்!

இயக்குனர்கள் ஜேடி – ஜெரி , விளம்பர பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்குபவர்கள். இவர்கள் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சரவணா ஸ்டோர்சின் விளம்பர படங்களை தொடர்ந்து எடுத்து வருபவர்கள். சில திரைப்படங்களையும் இயக்கியிருக்கின்றனர்.

இயக்குனர்கள் ஜேடி – ஜெரி  ஆகியோரது இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் படம், ‘தி லெஜெண்ட்’.  சரவணா ஸ்டோர்சின் அதிபர் அருள் சரவணன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஊர்வசி ரௌட்டெலா, சுமன், பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா,  மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள ‘தி லெஜெண்ட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

‘தி லெஜெண்ட்’ படம் ஆரம்பித்த முதல் இன்றுவரை அருள் சரவணனை சினிமா ரசிகர்கள் கிண்டலும், கேலியுமாக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது?

உலகிலுள்ள புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானிகளில் மிகவும் நேர்மையானவர் அருள் சரவணன். வெளிநாடுகளில் தனது பயணத்தை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது சர்க்கரை நோயினால் குழந்தைகள் உட்பட பலர் அவதிப்படுகிறார்கள். இதனால் மனவேதனைக்குள்ளாகும் அவர், இந்த நோயுக்கான புதிய மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியும் பெறுகிறார். இதை அபகரிக்க சுமன் , நாசர் கும்பல் சதிவேலை செய்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘தி லெஜெண்ட்’ படத்தின் கதை!

சினிமாவின் மீது ஏற்பட்ட அலாதி பிரியத்தால் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார் படத்தின் நாயகன் அருள் சரவணன். உச்சபட்ச நடிகர்களின் படங்களுக்கு இணையான மேக்கிங்! ஒவ்வொரு காட்சியிலும் பணத்தினை கொட்டி படமாக்கியுள்ளனர். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அருள் சரவணன் எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவனை காட்டுகிறார். இதனால் படம் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பிற்கு ஆளாகிவிடுகின்றனர், ரசிகர்கள்.

பணத்தைக்கொட்டி நடிக்க ஆசைப்பட்ட படத்தின் நாயகன் அருள் சரவணனுக்கு ஒரு சுமாரான திரைக்கதையையாவது அமைத்திருக்க வேண்டாமா? அவரையும் ஏமாற்றி, நம்மையும் ஏமாற்றி இருக்கிறார்கள். இயக்குனர்கள் ஜேடியும் – ஜெரியும்  .

விஜயகுமார், சச்சு, விவேக், ரோபோ ஷங்கர், மயில்சாமி, யோகி பாபு, முனிஸ்காந்த், தீபா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, பிரபு, நாசர், ஹரிஷ் பேரடி, வம்சி கிருஷ்ணா, லிவிங்ஸ்டன், லதா, சிங்கம்புலி, மன்சூர் அலிகான், அஷ்வத் குமார், மானஸ்வி, அமுதவாணன்  என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். அவ்வளவே!

பாடல்களில் ‘வாடிவாசல்’ பாடல் பரவாயில்லை! ஆனால் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. பிண்ணனி இசை? ஹாரிஸ் ஜெயராஜ்.  இசையில் பெரிதாக மெனக்கெடவில்லை!

ஒளிப்பதிவு செய்திருக்கிறார், வேல்ராஜ்!

பல கோடிகளை கொட்டி படம் தயாரித்த அருள் சரவணனுக்கு குறளி வித்தை காமித்து இருக்கிறார்கள், இயக்குனர்கள் ஜேடியும் – ஜெரியும் .

‘தி லெஜெண்ட்’ ரசிகர்களை மகிழ்விப்பதில் தோற்றுப்போயிருந்தாலும், அவரது கடைக்கான விளம்பரமாக ஜெயித்திருக்கிறது!