பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஃபாதர்’!

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில்,  பிரகாஷ் ராஜ்,  டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”.

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் ,  திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன்,  ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

அம்மா எனும் உறவை கொண்டாடும் சமூகம், அம்மாவின் பாசத்தை, தியாகத்தை போற்றும் சமூகம் அப்பாவை பற்றிப் பேசுவதே இல்லை. அப்பாவின் பாசம், பெருமை, வலிகள், எதுவும் எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. “கப்சா” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, RC Studios சார்பில் தயாரிப்பாளர் R.சந்துரு இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் தயாரித்து வருகிறார்.

இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் முழு இசை வெளியீடு நடைபெறவுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் வாங்கியுள்ளது.