டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, என். கிஷோர் (இயக்கம்), பாடல்களுக்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
‘மாயோன்’ பட குழுவினர், இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக ‘பார்வை சவால்’ உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் ‘மாயோன்’ பட டீஸரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டனர். பட குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது.
இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த ‘மாயோனே..’ எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர். இந்த பாடலின் லிரிக்கல் வீடியாவில் இடம்பெற்ற ‘ழ்’ என்ற சொல் குறித்து இணையவாசிகளிடம் பெரிய அளவில் விவாதமும் அரங்கேறியது. பாடல் முழுவதும் பரவிய ஆன்மீக உணர்வு, திரையிசை ரசிகர்களை துல்லியமாக சென்றடைந்து, பாடல் வெளியான குறுகிய காலத்தில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்தது.
டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி ‘யு’ சான்றிதழை வழங்கினர்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘மாயோன்’ திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.