ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில், K. கந்தசாமி, K. கணேஷன், V. விஜயகுமார், V. லோகேஸ்வரி விஜயகுமார் ஆகியோர் தயாரித்து, எஸ்.மணிபாரதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘தி பெட்’. இதில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், ஜான் விஜய், திவ்யா, தேவி பிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சென்னை, ஐடி’த்துறையில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள், வார விடுமுறையை நாட்களை வழக்கமாக ஈசிஆர் கடற்கரை பகுதியில் செலவிட்டு வருகின்றனர். இது போரடித்து போக, ஒரு மாறுதலுக்காக அனைவரும் ஊட்டிக்கு செல்ல முடிவெடுக்கின்றனர். அவரது நண்பர்களில் ஒருவரான பிளாக் பாண்டி, விலை மாதுவையும் அழைத்து செல்லலாம் என விரும்புகிறார். அனைவரும் சேர்ந்து விலை மாதுவான சிருஷ்டி டாங்கேவை அழைத்துச் செல்கின்றனர்.
ஊட்டியை வந்தடையும் ஶ்ரீகாந்த் நண்பர்கள் குழு, சிருஷ்டி டாங்கேவை அடையத்துடிக்கிறது. ஶ்ரீகாந்தோ, சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்கிறார். இதனால், சிருஷ்டி டாங்கேவிடம் நண்பர்களை நெருங்கவிடாமல் சாதூர்யமாக தடுத்து வருகிறார். ஒரு நாள் சென்ற நிலையில், ஶ்ரீகாந்தின் நண்பர்கள் சிருஷ்டி டாங்கேவை அனுபவித்து விட முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில், சிருஷ்டி டாங்கே காணாமல் போகிறார். அவரைத்தொடர்ந்து இன்னொருவரும் காணாமல் போகிறார். இந்த இருவரையும், ஶ்ரீகாந்தும் மற்ற நண்பர்களும் தேடிச்செல்கின்றனர். இதனிடையே, ஶ்ரீகாந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் கைது செய்கிறார். காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா? ஶ்ரீகாந்தின் காதல் என்ன ஆனது? போலீஸ் ஏன் ஶ்ரீகாந்தை கைது செய்தது? போன்ற கேள்விகளுக்கான விடை சொல்வது தான், ‘தி பெட்’ படத்தின் மீதிக்கதை.
வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் குறை சொல்லும்படி இல்லை. ஆனால், அவரது கதாபாத்திர வடிவமைப்பு குழப்பத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது.
கிறிஸ்டி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, ஆபாசமில்லாமல் அந்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டிருக்கிறார். தன்னிடம், ஶ்ரீகாந்த் அவரது காதலை தெரிவிக்கும்போது, மறுப்பு தெரிவித்து அவர் பேசும் வசனங்கள் சிறப்பாக இருக்கிறது. நியாயமானதும் கூட.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் செய்யும் சேட்டைகளைத்தான் தாங்க முடியவில்லை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், சிருஷ்டி டாங்கேவின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவி பிரியா ஆகியோர், குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
தாஜ்நூர் இசையில் ஒரு பாடல் ஓகே. பின்னணி இசையும் ஓகே தான். ஒளிப்பதிவாளர் கோகுல், காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.மணிபாரதி, விலைமாது மேல் காதல் கொள்ளும் ஒரு இளைஞனின் காதலை, சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லருடன் கொடுத்துள்ளார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
‘தி பெட்’ – விலை மாதுவுக்காக அழுகிறது!