‘தி டோர்’ (விமர்சனம்.) திகிலூட்டும், க்ரைம் ட்ராமா!

‘JUNE DREAMS STUDIOS’ சார்பில், நவீன் ராஜன் தயாரித்து, ஜெய் தேவ் எழுதி இயக்கியிருக்கும் படம், ‘தி டோர்’. இதில் பாவனா, ரோஷினி, ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராம், பைரி வினோ, வினோலயா, கபில், ரமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், சிந்தூரி ,சங்கீதா, பாண்டி ரவி, கிரீஸ் , நந்தகுமார், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாவனா, ஒரு சிறந்த சிவில் ஆர்க்கிடெக்ட்  அவர், ஒரு பல்லடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்திற்கான வடிவமைப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக அந்த வளாகத்திற்குள் இருக்கும், ஒரு சிறிய, பழமையான கோயில் இடிக்கப்படுகிறது. அதன் பிறகு, பல அமானுஷ்ய மரணங்கள் அங்கு நிகழ்கிறது. அதன் தொடர்ச்சியாக, பாவனாவின் தந்தையும் விபத்து ஒன்றில் மரணமடைகிறார். தொடர்ந்து, பாவானாவின் தோழிக்கும் பாவானாவுக்கும் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் பயமுறுத்துகின்றன.

பாவனா, அதை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘தி டோர்’ படத்தின் திகிலூட்டும், பரபரப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படம் ஆரம்பித்தவுடன், ஆவி அமானுஷ்யம் என செல்கிறது. அதன் பிறகு மெதுவாக க்ரைம் த்ரில்லராக செல்கிறது. அதன் பிறகு, இரண்டும் கலந்து செல்ல திரைக்கதையில் சுவாரஷ்யம் கூடுகிறது.

பாவனாவின் கதாபாத்திரத்தினை முன்னிறுத்தி, பயணம் செய்யும்  திரைக்கதை. அதை அவரும் உணர்ந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைச் சுற்றி நிகழ்ந்த, மர்மமான முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழும் போது, சுவாரஷ்யம் ஏற்படுகிறது.

போலீஸ் அதிகாரி ரியாசுதினாக கணேஷ் வெங்கட்ராம். சினிமா டெம்ப்ளேட் கதாபாத்திரம். அதை, அவர் குறைவில்லாமல் செய்திருக்கிறார். அவருக்கான கதாபாத்திரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மற்றபடி ரோஷினி, ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராம், பைரி வினோ, வினோலயா, கபில், ரமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், சிந்தூரி ,சங்கீதா, பாண்டி ரவி, கிரீஸ் , நந்தகுமார், சிவரஞ்சனி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயண்பட்டிருக்கிறார்கள்.

பைரி வினோ, கதாபாத்திரத்தின் பங்கு திரைக்கதைக்கு போதுமானதாக இல்லை. இன்னும் அதிகப்படுத்தியிருந்தால், மேலும் சுவாரசியம் கூட்டியிருக்கும்.

ஒளிப்பதிவாளர் கெளதம். ஜி யின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் வருண் உன்னியின் பின்னணி இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், பாராநார்மல் ஆக்டிவிட்டி – க்ரைம் இரண்டையும் அழகாக பிணைந்திருக்கிறார். குழப்பமில்லாமல் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செல்லும் திரைக்கதை, க்ளைமாக்ஸ் முன்னர் சற்று தொய்வடைகிறது. அது படத்தின் பலவீனம். அதேபோல் காட்சிகள் அரைகுறையாக, அடுத்த காட்சிக்கு லீடில்லாமல் முடிவதையும் தவிர்த்திருக்கலாம்.

அதை தவிர்த்து, படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை!

‘தி டோர்’ –  திகிலூட்டும், க்ரைம் ட்ராமா!