தீர்க்கதரிசி – அமெச்சூர், அவுட்டேட்டடு, ஆணவக்கொலை!

ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்கள் PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தீர்க்கதரிசி. க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன், தேவதர்ஷினி, மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் சூப்பர்வைசராக பணி செய்கிறார் ஶ்ரீமன். கட்டுப்பாட்டு அறைக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில், பேசுபவர் அடையார் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்படுவதாக எச்சரிக்கிறது. அதை ஶ்ரீமன் குழுவினர் அலட்சியம் செய்கின்றனர். ஆனால் சொன்னபடியே அந்தக்கொலை நடக்கிறது. அதிர்ந்து போகும் ஶ்ரீமன், உயரதிகாரிகளிடம் இது குறித்து தெரிவிக்கிறார். விசாரணை மேற்கொண்டிருக்கும் போதே வேறு சில கொலைகள், விபத்துகள் பற்றி அந்த மர்மக்குரல் எச்சரிக்கிறது. மர்மக்குரல் தெரிவிக்கும் அனைத்தும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் தமிழக முதல்வர், அஜ்மல் தலைமையில் ஜெய்வந்த்தும், துஷ்யந்தும் துப்பு துலக்குகின்றனர். இதன் முடிவே தீர்க்கதரிசி.

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக காணாமல் போன அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த் ஆகியோர் தீர்க்கதரிசி படத்தில் தலை காட்டியிருக்கிறார்கள். தமிழகத்தையே உலுக்கும் கொலைகளை கண்டுபிடிப்பதற்கான இவர்களின் விசாரணை எந்த இடத்திலும், விறுவிறுப்பையோ, சுறுசுறுப்பையோ தரவில்லை! மாறாக கண்டுபிடிச்சா என்ன!? பிடிக்கலைன்னா என்ன? என்பது போல் திரைக்கதை அலுப்பை ஏற்படுத்துகிறது. முதல் பாதி பரவாயில்லை. போதாக்குறைக்கு ஒருவர் முகத்திலும் கதாபாத்திரங்களுக்குரிய முக பாவனை இல்லை! நடிகர்களிடம் நடிப்பினை கொண்டுவர இரட்டை இயக்குநர்கள் PG மோகன் – LR சுந்தரபாண்டி எந்த அக்கறையையும் காட்டியது போல் தெரியவில்லை! தேர்ந்த நடிகர் சத்யராஜை கூட சரியாக பயண்படுத்தவில்லை! என்பது தான் ஆக பெரும் சோகம். இயக்குநர்கள் ஆளும் கட்சியான திமுக – தமிழக முதல்வர் ஸ்டாலினை மட்டும் திருப்தி படுத்த முயன்றிருக்கிறார்கள்!

அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் இவர்களில் யாருக்குமே சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு இல்லை! ஶ்ரீமன், ஸ்ரீமனின் மனைவியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, அப்பாவாக வரும் மோகன்ராம் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

மனோ தத்துவ நிபுணராக நடித்திருக்கும் ஒய் ஜி மகேந்திரன் நன்றாக நடித்திருக்கிறார்.

படம் ஆரம்பமான சில காட்சிகள் ஒரு தரமான படம் பார்ப்பதை போல் தீர்க்கதரிசி உணர்த்தினாலும், அதன் பிறகான காட்சிகள் செல்லச் செல்ல அமெச்சூர்த்தனமாக இருக்கிறது. லாஜிக்குகளை பெயரளவுக்குக்கூட கடைப்பிடிக்கவில்லை. தீர்க்கதரிசி’யின் போக்குவரத்து சிக்னல் விபத்து, ஆழ்துளை கினற்றுக்குள் குழந்தை இவைகளை உதாரணமாக சொல்லலாம். போலீஸ் புரொட்டோகால்களை அப்பட்டமாக மீறியிருக்கிறார்கள். அஜ்மல் செய்யும் கொலை வேண்டுமென்றே திணிக்கப்பட்ட வன்மம்!  சத்யராஜ் போலீஸ் கமிஷனர் ஆஃபிஸ் உள்ளேயே நுழைந்து கொலை செய்வதெல்லாம், இயக்குநர்களின் கற்பனைக்கு எட்டாத அதிபுத்திசாலித்தனம்!? இப்படி பல காட்சிகள்.

அந்தோணி தாசன் பாடும் பாடல் திரைக்கதைக்கு தேவையில்லாமல் இடையில் வந்து அவஸ்தை படுத்துகிறது.

மொத்தத்தில், ஒரு தீர்க்கதரிசி அவுட்டேட்டடு, ஆணவக்கொலை!