‘தி ராஜாசாப்’ திரைப்படத்தை, ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ சார்பில், டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், மாருதி. இதில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், ஜரினா வஹாப், போமன் இரானி, சத்யா, பிரபாஸ் சீனு, சமுத்திரக்கனி, ரங்கஸ்தலம் மகேஷ், சப்தகிரி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘தி ராஜாசாப்’, மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே உருவாகியிருக்கும் திரைப்படம். பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடித்திருப்பதாலேயே இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு. அதோடு, கிளாமரை அள்ளி வழங்க மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று நாயகிகள். காமெடிப் பேய்க்கதை. இதுவே இந்த படத்தின் எதிர்பார்ப்பிற்கான காரணம். எப்படி இருக்கிறது?
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ராஜு (பிரபாஸ்), பாட்டி கங்கம்மாவின் (ஜரீனா வஹாப்) அரவணைப்பில் வளர்ந்து வாலிப வயதை அடைகிறார். அவ்வப்போது நினைவுகளை இழக்கும் கங்கம்மா, மர்மமான முறையில் கானாமல் போன கணவன் கனகராஜுவை (சஞ்சய் தத்) தேடி வருகிறார். இந்நிலையில், ராஜூவும் தனது தாத்தா கனகராஜூவை தேடிச் செல்கிறார். அப்போது பைரவியை (மாளவிகா மோகனன்) சந்திக்கிறார். அவரது தாத்தா (சமுத்திரக்கனி) கங்காராஜுவின் உதவியோடு, தன்னுடைய தாத்தா கனகராஜூவை கண்டுபிடிக்கிறார். அப்போது, அவர் மறு பிறவி எடுக்கும் முயற்சியில் மாயாவியாக அலைந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை, மாயாஜால வித்தைகளுடன் காமெடியாக சொல்ல முயற்சித்திருப்பது தான், தி ராஜாசாப் படத்தின் சுவாரசியமற்ற , விறுவிறுப்பற்ற திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
பாராநார்மல் மற்றும் சைக்காலஜி இந்த இரண்டையும் வைத்து ரசிகர்களை எவ்வளவு குழப்ப முடியுமோ, அந்த அளவிற்கு குழப்பி, திரைக்கதை அமைத்திருக்கிறார். இயக்குநர், மாருதி. சரி, என்ன வேணாலும் நடக்கட்டும் கொஞ்சம் சிரிக்க வையுங்க. இல்ல பயமுறுத்துங்கண்ணு ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அது கடும் அயர்ச்சியைத் தருகிறது.
முதல் பாதியில் காதல், மற்றும் கிளாமர் காட்சிகள். அது ரசிகர்களை ஓரளவு திருப்தி கொடுக்கிறது.
இரண்டாம் பாதியில், டாக்டர் பத்மபூஷன் (போமன் இரானி) சைக்காலஜி கிளாஸ் எடுக்க ஆரம்பித்து விடுகிறார். அது மேலும் அயர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.
கனகராஜூவின் அரண்மனைக்குள் சிக்கிக்கொள்ளும் ராஜூவின் வகையறாக்கள் அதிலிருந்து மீள்வது குறித்த காட்சிகள் எல்லாம், ஆள விடுங்கடா சாமி வகையாக இருக்கிறது. துளியும் பயமுமில்லை. காமெடியும் இல்லை. மாறாக கடுப்பேற்றுகிறது.
வி எஃப் எக்ஸ் உள்ளிட்ட உயர்தரமான தொழில் நுட்பத்தில் அசத்தியிருக்கிறார்கள். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும், எஸ் தமனின் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது. ஆனால், தொழில்நுட்பம் மட்டுமே ரசிகர்களை திருப்தி படுத்தாது என்பதை, இயக்குநர் மாருதி புரிந்து கொள்ளவில்லை. மற்றபடி படத்திலிருந்து சொல்ல எதுவுமில்லை!
தி ராஜா சாப் – பஹுத் கரீப்!