சிபிசிஐடி அதிகாரிகளான சுரேஷ் மேனனும், சரத்குமாரும் ‘ஸ்மைல் மேன்’ என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்க முயற்சிக்கின்றனர். அப்போது அந்த சைக்கோ கொலையாளிக்கும் இவர்களுக்கும் நடக்கும் மோதலில், சுரேஷ் மேனன், சரத்குமார் இருவரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார்கள். இந்த மோதலில் சரத்குமார் தலையில் காயம்பட்டு பல நாட்கள் கழித்து குணமடைகிறார். இருந்தாலும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளை இழந்து வருகிறார். இதனிடையே, சைக்கோ கொலையாளி சரத்குமாரை சுற்றியிருப்பவர்களை கொலை செய்கிறான். இதனால், சரத்குமார் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார். ‘ஸ்மைல் மேன்’ கொலையாளி யார்? அவனை சரத்குமார் பிடித்தாரா, இல்லையா? என்பதே ‘ஸ்மைல் மேன்’ படத்தின் கதை.
சரத்குமார், தொடர்ந்து போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தாலும், ஏதாவது ஒரு வித்தியாசத்தினை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். ஸ்மைல் மேன் படத்தில், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவராக, சிபிசிஐடி அதிகாரி ‘சிதம்பரம் நெடுமாறன்’ என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். படத்தின் பலமாகவும் இருக்கிறார்.
மூத்த சிபிசிஐடி அதிகாரியாக சுரேஷ் மேனன், காவல்துறையின் மேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை குறித்து பேசும் காட்சி சிறப்பு. சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளாக ஸ்ரீகுமார், சிஜா ரோஸ் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
கலையரசன், இனியா, சுரேஷ் மேனன், நட்ராஜன், ராஜ்குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் கலையரசன் மிரட்டியிருக்கிறார். இனியாவின் மகளாக நடித்திருக்கும் சிறுமியும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
‘சைக்கோ கொலையாளி’ யை சுற்றிவரும் ‘கிரைம் திரில்லர்’க்கு ஏற்ற திரைக்கதை இல்லாதது ஏமாற்றமே! எந்தக்காட்சியிலும் படபடப்போ, பயமோ ஏற்படவில்லை! கதையாசிரியர் கமலா அல்கெமிஸ் தடுமாறியிருக்கிறார்.
ஆனால், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன், திரைக்கதையை முடிந்தவரை சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறார்கள்.
மற்றபடி பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை!
மொத்தத்தில், ‘ஸ்மைல் மேன்’ பயமுறுத்தாமல் ‘கொட்டாவி’ விட வைக்கிறார்!