‘திரு(ட்டு).மாணிக்கம்’ – விமர்சனம்!

திரு.மாணிக்கம் திரைப்படத்தை G.P.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். நந்தா பெரியசாமி, கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

முக்கியமான கதாப்பாத்திரங்களில் இயக்குநர் பாரதிராஜா, நாசர் இருவரும் நடித்திருக்க சமுத்திரக்கனி, அனன்யா, வடிவுக்கரசி, தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழக, கேரள எல்லைப் பகுதியில் ஒரு சிறிய லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார், சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளோடு, அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகிறார். அந்த நிலையிலும் நேர்மை தவறாது இருந்து வருகிறார்.

இந்நிலையில், பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற பாரதிராஜா, சமுத்திரக்கனியின் லாட்டரிச் சீட்டுக்கடையில், சில லாட்டரி சீட்டுக்களை வாங்குகிறார். வாங்கிய பின்னரே, பாரதிராஜாவின் பணம் தொலைந்துள்ளது பற்றி அவருக்கு தெரிய வருகிறது. இதனால், பணம் கொடுத்துவிட்டு, அந்த லாட்டரி சீட்டுக்களை வாங்கிக் கொள்வதாக சமுத்திரக்கனியிடம் கூறுகிறார். சில நாட்கள் சென்ற நிலையில், பாரதிராஜா வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு ரூ.1.50 கோடி பரிசு விழுகிறது. அதை பாரதிராஜாவிடம் கொடுக்க சமுத்திரக்கனி முடிவு செய்கிறார். சமுத்திரக்கனியின் மனைவி அனன்யா, பாரதிராஜா பணம் கொடுத்து வாங்காத காரணத்தால் அந்த பரிசு நமக்கு உரிமையானது, என்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் திரு.மாணிக்கம் படத்தின் கதை.

கடந்த 2023 ஆண்டில் எம். செல்வகுமார் எழுதி இயக்கிய, நடிகர் வெற்றி, ஷிவானி நாராயணன் மற்றும் ஹரீஷ் பெராடி நடிப்பில் வெளியான ‘பம்பர்’ படத்தின் அப்பட்டமான காப்பி தான், திரு. மாணிக்கம். இல்ல, திருட்டு மாணிக்கம். இந்த தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தம் இருக்கு. ஆமாம். திருடன் எப்படி ‘திரு’ ஆகுகிறான் என்பது தான் படத்தின் ஒன் லைன்!

சமுத்திரக்கனி, அனன்யா மற்றும் பாரதிராஜா ஆகிய மூவரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். இவர்களில் அனன்யா முதலிடத்தினை பிடித்த்உ கொள்கிறார். அவரது ஆர்ப்பாட்டமில்லாத, இயல்பான நடிப்பினால் படம் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். குடும்பத்தை நடத்த போதுமான பணமின்றி அவஸ்தை படுவதிலும், வாய்பேசமுடியாது தவிக்கும் குழந்தையின் மருத்துவ செலவுக்கு அல்லல் படும்போதும், கணவர் சமுத்திரக்கனியிடம் தற்கொலை செய்வதாக மிரட்டும் காட்சியிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, பரிதாபம் ஏற்படுத்துகிறார்.

அடுத்தாக பாரதிராஜா வயது முதிர்ந்த, மகளை வாழவைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் அப்பாவாக, கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். அவரது வயது கதாபாத்திரத்திற்கு உதவி செய்திருக்கிறது.

கடைசியாக சமுத்திரக்கனி, எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான முக பாவனை காட்டி, படம் பார்ப்பவர்களை அலுத்து போகச் செய்கிறார்.  அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் உயிரோட்டம் இல்லை. க்ளைமாக்ஸில், இடம் பெறும் சிறுவன் – ஹரீஷ் பெராடி – தன்னுடைய சம்பந்தம் பற்றி தன்னுடைய மகளிடம் கூறும் காட்சியில் மட்டுமே, கண்களில் நீர் கசிகிறது.

சமுத்திரக்கனியை போலீஸ் விரட்டிச்செல்லும் காட்சிகளில் திக் திக்.. இன்ஸ்பெக்டராக நடித்த சலீல் குமார் சூப்பர்!

மற்றபடி இளவரசு, நாசர், வடிவுக்கரசி, பாதிரியார்களை நக்கலடிக்கும் சின்னி ஜெயந்த், கருணாகரன், சாம்ஸ், ஸ்ரீமன் ஆகியோரும் தங்களது இருப்பினை பதிவு செய்துள்ளனர்.

தம்பி ராமையா, காமெடி என்ற பெயரில் இம்சித்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமியின் திரைக்கதை, பாராட்டும்படியாகவும் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தினை போதிக்கும் படமாகவும் இருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்.

நேர்மையை போதிக்கும் படத்தில், ‘பம்பர்’ படத்தை ‘அலேக்’ செய்திருப்பது நேர்மையானதா? இது, இயக்குநர் நந்தா பெரியசாமிக்கான கேள்வி!?