ஷேடோ லைட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து, ‘ஆக்சன் ஜாக்சன் ஜெனீஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள படம் தூநேரி. இதில் ஜான் விஜய், நிவின் கார்த்திக், மியா ஸ்ரீ, குழந்தை நட்சத்திரங்கள் அஸ்மிதா நகுல், அபிஜித் சாத்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல படங்களில் கிராபிக் டிசைனராக பணியாற்றிய சுனில் டிக்சன் இந்தப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் நாயகன் நிவின் கார்த்திக், ‘தூநேரி’என்ற கிராமத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். இதனால் குடும்பத்துடன் அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது. தொடர்ந்து பல மரணங்களும் நடக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் ஊர்க்காவல் செய்யும் கருப்பசாமி என்பவர் தான் காரணம் என்றும் அவன் மிகவும் கொடூரமானவன் என்றும் அந்த கிராம மக்கள் நம்புகிறார்கள். இதனை கண்டுபிடிக்க முயலும் போலீஸ் அதிகாரிக்கும் ஆபத்து நேர்கிறது. அதிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
இந்த பேய் சில இடங்களில் பயமுறுத்தினாலும் பல இடங்களில் பயமுறுத்தவில்லை. இது குழந்தைகளுக்கான பேய்க்கதை. என்பதால் அதிகம் அதை பற்றி இயக்குனர் கவலைப்படவில்லை!
சித்தி கொடுமை அதை சுற்றி நடக்கும் சம்பவம் என்று திரைக்கதை பயணிக்கிறது. இயக்குநர் கிராபிக்ஸில் வல்லுனர் என்பதால், சில காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார்.
ஜான் விஜய் கருப்பசாமியாக நடித்து மனம் கவர்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிவின் கார்த்திக் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் ஆன் விஜய் மகனாக நடித்துள்ள சிறுவன் சிறப்பாக நடித்துள்ளான்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இயக்குனருக்கு கை கொடுத்துள்ளது.
தூநேரி – பயமுறுத்தாத பேய்.