துணிவு – விமர்சனம்!

Written & Directed by  :  H. Vinoth

Produced by : Boney Kapoor

Starring   :    Ajith Kumar, Manju Warrier,  Samuthirakani, Pavani Reddy

Cinematography : Nirav Shah

Edited by:  Vijay Velukutty

Music by:  Ghibran

Production companies:     Bayview Projects LLP,   Zee Studios

துணிவு – விமர்சனம்!

சென்னையில் இயங்கிவரும் பிரபலமான பேங்க்! ‘யுவர் பேங்க்’ .  இந்த பேங்கை அஜித்குமார், மஞ்சுவாரியர் உள்ளிட்ட கும்பல், துப்பாக்கி சகிதமாக உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அதே சமயத்தில் பேங்க் உள்ளே ஏற்கனவே இருக்கும் கும்பலும் அதே முயற்சியில் இருக்கிறது. இதனால் இந்த இரண்டு கும்பலுக்கும் நடுவே பயங்கர துப்பாக்கி சண்டை நடக்கிறது. முடிவில் அஜித்குமார் மற்றொரு கும்பலால் துப்பாக்கி முனையில் சிறை பிடிக்கப்படுகிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்களை, டிவிஸ்டுகள் அடங்கிய பரபரப்பான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார், இயக்குனர் ஹெச்.வினோத்.

துணிவு முழுக்க முழுக்க அஜித்தின் ஒன் மேன் ஷோ! அல்ட்டிமேட் ஸ்டைலில், அஜித் இடம் பெறும் ஒவ்வொரு காட்சியுமே ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் காட்சிகள். இப்படியான காட்சிகள் பல இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்த காட்சியாக, அஜித் ‘மைக்கேல் ஜாக்சன்’ ஸ்டெப்ஸ் போடும் காட்சியை சொல்லலாம். பெர்ஃபெக்ட்டான மேக்கப் & காஸ்ட்யூம்!  அஜித்தின் ரசிகர்களை அவரது லுக்கும், ஸ்டைலும் திருப்தி படுத்திவிடுகிறது.

இண்டர்நேஷனல் வில்லனுக்கு ஏற்ற ஜோடியாக மஞ்சு வாரியர். மற்றபடி வழக்கமான ஆக்‌ஷன் ஹீரோயினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம். அவரது நடிப்பில் பெரிய குறைகள் எதுவும் இல்லை. ஸ்டண்ட் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.

துணிவு படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும், அனைவரின் கவனத்தையும் எளிதில் கவருபவர், பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் மோகனசுந்தரம். சேனல் எடிட்டோரியலை பற்றி  அவர் அடிக்கும் கமெண்ட்ஸூகள் தாறுமாறு. இன்கிரிமெண்ட், பெஸ்ட் எம்ப்ளாயி காமெடி எல்லாம் சிரிப்போ சிரிப்பு.

யுவர் பேங்க் தலைவராக நடித்திருக்கும் ஜான் கொக்கேன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வு. க்ளைமாக்ஸில் அவரை கோமாளித்தனமாக சித்தரித்தது முரண்பாடு!

விரைத்தபடியே போலீஸ் கமிஷ்னராக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, போலீஸ், மிலிட்டரி ஆட்களை கொன்று குவிக்கும் அஜித்தை, பாராட்டுவது நகைப்புக்குரியது. காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் கதாபாத்திரம்.

மற்றபடி, வங்கி மேலாளராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ‘பக்ஸ்’ பகவதி, ‘மகாநதி’ சங்கர், பால சரவணன், சின்னத்திரை பிரபலம் பிரேம் என அனைவரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

அப்பாவி மக்களின் பணத்தை அசால்ட்டாக கொள்ளையடிக்கும் வங்கிகளின் கோர முகத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார், துணிவு படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத்.

துணிவு படத்தின் முதல் பகுதி  விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பகுதி சற்றே தொய்வு! ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் இன்னும் சுவாரஷ்யத்தை கூட்டியிருக்கலாம்.

துணிவு படத்தின் பலம் ஜிப்ரானின்  பின்னணி இசை. அஜித் வரும் காட்சிகளில் பிண்ணனி இசை, மேலும் அந்தக் காட்சிகளை மேம்படுத்துகிறது.

உலகத்தரத்திலான நீரவ் ஷாவின்  ஒளிப்பதிவு  அட்டகாசம்! துப்பாக்கி சண்டைக் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார். மேலும், க்ளைமாக்ஸில் கடலில் சீறிப்பாயும் படகுகளை படம்பிடித்திருப்பது செம்ம..!

மொத்தத்தில் ‘துணிவு’, மக்களுக்கு வங்கிக் கொள்ளை குறித்த , விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாஸ் & க்ளாஸ் கமர்ஷியல் மசாலா!