உடன் பால் – விமர்சனம்!

D Company சார்பில் K.V. துரை தயாரித்து, ஆஹா (Aha Tamil Original OTT) தளத்தில் வரும் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் உடன் பால். இதில் சார்லி, லிங்கா, காயத்ரி, அபர்ணதி, விவேக் பிரசன்னா, தீனா, நக்கலைட்ஸ் தனம்  உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கார்த்திக் ஶ்ரீனிவாசன் இயக்கியிருக்கிறார்.

சார்லியின் மகன் லிங்கா. சொந்த தொழில் செய்து வரும் அவருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. அன்றாட செலவுகளுக்கே அவர் கடும் போராட்டத்தை சந்திக்கிறார். இதனால் தனது தங்கை காயத்ரியின் துணையோடு சொந்த வீட்டினை விற்க முடிவு செய்கிறார். வீட்டுப் பத்திரத்தில் இருக்கும் குளறுபடியால், அது முடியாமல் போகிறது. கடன்காரர்களின் கெடுபிடியால் செய்வதறியாது தவிக்கிறார். இந்நிலையில் சார்லி ஒரு கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் கிடைக்கிறது. இந்த இடிபாட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கிறது. அப்பாவை இழந்த சோகம் ஒரு புறம் இருந்தாலும் 20 லட்சம் ரூபாய் கிடைக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறார். அதன் பிறகு லிங்காவின் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது என்பதை கலகலப்புடன் படமாக்கியிருக்கிறார், இயக்குனர் கார்த்திக் ஶ்ரீனிவாசன்.

சார்லி, லிங்கா, காயத்ரி, அபர்ணதி, விவேக் பிரசன்னா, தீனா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்றபடி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  இதில் லிங்காவின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணதி வெகு சிறப்பாக நடித்திருக்கிறார். அடுத்தபடியாக லிங்கா பொருளாதாரம், சூழ்நிலை இவற்றுகிடையே சிக்கித் திணறும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்.

விவேக் பிரசன்னாவின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி, ஒரு சில இடங்களில் மட்டும் அதீத நடிப்பினினால் அந்நியப்பட்டு நிற்கிறார். மற்றபடி ஆச்சர்யப்படுத்தும் நடிப்பு. விவேக் பிரசன்னா, சிரிக்க வைக்கிறார்.

சார்லி சிலகாட்சிகள் நடித்தாலும் அவரது தேர்ந்த நடிப்பு அருமை!

ஒரே ஒரு வீட்டிற்குள்ளேயே மொத்தப்படத்தையும் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு சூப்பர்.

கத்திமேல் நடப்பது போன்ற கதை. அதை லாவகமாக க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருந்தாலும், க்ளைமாக்ஸில் அதளபாதளத்தில் விழுந்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ஸ்ரீனிவாசன்.

முடிவில்லா… முடிவு!