‘உடன்பிறப்பே’ : விமர்சனம்.

பெண் கதாபாத்திரங்களை முன்னிலை படுத்தும் ’36 வயதினிலே’, ‘காற்றின் மொழி’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற படங்களை தயாரித்த ‘2டி என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், ‘உடன்பிறப்பே’. இது ஜோதிகா நடித்துள்ள ’50’ வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார், சமுத்திரக்கனி, நரேன், சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கியுள்ளார்.

‘அமேசான் பிரைம் ஒடிடி’ தளத்தில் வெளியாகியுள்ள ‘உடன்பிறப்பே’ எப்படியிருக்கிறது?

‘மாதங்கி’யாக ஜோதிகாவும், உடன்பிறந்த அண்ணன் ‘வைரவன்’ னாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் ‘சற்குணம்’ மாக சமுத்திரக்கனியும், சசிகுமாரின் மனைவி ‘மரகத வள்ளி’யாக சிஜாரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை, சட்டப்படி மட்டுமே அணுகுபவர் சற்குணம். ஆனால், வைரவன் அப்படியல்ல! அடிதடிக்கு அப்புறம் தான் பஞ்சாயத்தே. இதனால்  இந்த குடும்பத்தினரிடையே எப்போதும் ஒரு உரசல்.

மாதங்கி எடுக்கும் ஒரு முடிவால் பிரியும் இரண்டு குடும்பங்களும், அவர் எடுக்கும் இன்னொரு முடிவால், இணைகிறது. ஏன்.. எப்படி?

என்பதை கிராமத்துப் பின்னணியில் சொல்லியிருக்கிறார், இயக்குனர் இரா.சரவணன்.

திரைக்கதையின் ஊடே சமூகத்தில் நடந்துவரும் பிரச்சனைகளை பேசுவது சிறப்பு. முன்னாள் முதல்வர் ‘பெருந்தலைவர்’ காமராஜர் பாணியில் கைநாட்டு பார்த்து முடிவெடுக்கும், சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சி இயக்குனரின் சூப்பர் டச்!

கணவனுக்கும், அண்ணனுக்கும் இடையே நின்று தவிக்கும் ஜோதிகா. இயலாமை, பரிதவிப்பு, சோகம், ஆசை என எல்லாக் காட்சிகளிலும் டயலாக் பேசாமலேயே உணர்வுகளால் நடித்து அசத்தியிருக்கிறார்.

ஜோதிகா சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள் பெண்களை கண் கலங்கச் செய்யும். ‘எனக்கு இரண்டு பிள்ளைகள். அண்ணனுக்கு ஒரே பிள்ளை!’ என நினைத்து, கிணற்றுக்குள் அவர் எடுக்கும் முடிவு அண்ணன் , தங்கச்சியின் உச்சக்கட்ட பாசம்!!

வழக்கமான புரட்சி செய்யும் கதாபாத்திரத்திலிருந்து மாறுபட்ட சமுத்திரக்கனி. ஆசிரியராக அளாவான நடிப்பு! அடிதடி ஏரியாவில் அட்டகாசமான சசிகுமார். தங்கச்சிக்காக உருகும் காட்சியில் கண் கசியச் செய்கிறார்.

சூரி அவ்வப்போது வந்து சில காமெடிகளை செய்து சிரிக்க வைக்கிறார்.

திருவிழாக் கூட்டத்தினையும், காட்சிகளையும் அழகாக படம்பிடித்திருக்கும்  ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இன்ஸ்பெக்டர் வேடத்தில் கட்சிதமாக நடித்திருக்கிறார்.

அண்ணன், தங்கச்சி சென்டிமென்ட்டை முன்னிலைப் படுத்தி பெண்களுக்கான ஒரு பொழுது போக்கு படத்தினை கொடுத்துள்ளார், இயக்குனர் இரா.சரவணன். குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்!