‘வா வாத்தியார்’ (விமர்சனம்.) அம்போன்னு விட்ட நலன் குமரசாமி!

கார்த்தி, கிருத்தி ஷெட்டி , ராஜ்கிரண் , சத்யராஜ் , ஆனந்தராஜ் , ஜி. எம். சுந்தர் , கருணாகரன் , ஷில்பா மஞ்சுநாத் , ரமேஷ் திலக் , நிழல்கள் ரவி , யார் கண்ணன் , நிவாஸ் ஆதிதன் , பி. எல். தேனப்பன் , வித்யா  உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘வா வாத்தியார்’. கதை எழுதி இயக்கியிருக்கிறார், நலன் குமரசாமி. ஒளிப்பதிவு,  ஜார்ஜ் சி. வில்லியம்ஸ். இசை,  சந்தோஷ் நாராயணன். இத்திரைப்படத்தினை, ‘ஸ்டுடியோ கிரீன்’ சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

புரட்சி தலைவர், எம்ஜிஆரின் முரட்டுத்தனமான பக்தர் ராஜ்கிரண். எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாத காலக்கட்டம். தங்களது சோகத்தைப் போக்க, அவர் நடித்த படங்களை திரையிட்டு பார்த்து வருகிறார்கள். அப்படியான சூழலில், எம்ஜிஆரின் காலமான செய்தி வருகிறது. ராஜ்கிரண் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்நிலையில், அவருக்கு பேரன் பிறந்திருப்பதாக தகவல் வருகிறது. ஓடோடிச்சென்று பேரனை பார்க்கிறார். உள்ளங்காலில் மச்சத்துடன், எம்ஜிஆரின் அங்க அடையாளங்களுடன் பேரன் பிறந்திருப்பதாக எண்ணி சந்தோஷப்படுகிறார். அதோடு, எம்ஜிஆரின் நல்ல குணங்களை பேரன் கார்த்திக்கு சொல்லிச் சொல்லி வளர்த்து வருகிறார். ஆனால், கார்த்தி எம்ஜிஆரைப் போல் வளராமல், அதற்கு நேர்மாறாக வளர்ந்து நிற்கிறார்.

இன்ஸ்பெக்டரான கார்த்தி, அரசியல் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் சத்யராஜ் செய்துவரும் முறைகேடுகளுக்கு துணை நிற்கிறார். ‘மஞ்சள் முகம்’ என்ற  அமைப்பினர், சத்யராஜ் நடத்தி வரும் கெமிக்கல் ஃபேக்டரியினால், மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அந்த ஃபேக்டரியில் நடக்கும் முறைகேடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதனால் கோபமடையும் சத்யராஜ் , அந்த அமைப்பச் சேர்ந்தவர்களை தீர்த்துகட்ட கார்த்தியை நியமிக்கிறார். கார்த்தி அவர்களை தேடிச்செல்கிறார். இந்நிலையில், எம்ஜிஆரின் ஆவி கார்த்தியின் உடலுக்குள் புகுந்து விடுகிறது. இதன்பிறகு என்ன நடந்தது. என்பது தான் ‘வா வாத்தியார்’.

டார்க் காமெடி என்ற பெயரில் நலன் குமரசாமி, உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு இந்தப்படத்தை எடுத்து வைத்து இருக்கிறார். டார்க் காமெடி என்றால், எப்படி வேண்டுமானாலும் எடுத்துவிடலாம். ரசிகர்கள் ரசிப்பார்கள், என்று நினைத்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் ஒரே கழுத்தறுப்பு. எம்ஜிஆரை புகழ்ந்து பேச ஆயிரம் இருக்கிறது. அதை விடுத்து, திரைக்கதையும் எங்கெங்கோ.. செல்கிறது. எம்ஜிஆருக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதிலும், புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் புகழ்பெற்ற பாடலான, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலை  ரிமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து வைத்திருக்கிறார்கள். ‘திரௌபதி’ சபையில் அவமானப்படுத்தப்பட்டது போல், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை அவமானப்படுத்தியிருக்கிறார், இந்த பாடலை வடிவமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

கார்த்தியின் கதாபாத்திரம் அந்நியன், துக்ளக் தர்பார் என பல படங்களில் பார்த்த கதாபாத்திரம் என்பதால் ரசிக்க முடியவில்லை. அவர் புரட்சித் தலைவர் போல் செய்யும் செய்கைகளையும் ரசிக்க முடியவில்லை! பாடல்காட்சிகளில் கிளாமராக வந்து போகும் கிருத்தி ஷெட்டி, அரைகுறை ஆடைகளில் ரசிகர்களை கவர்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் காட்சிகளையும், ஃப்ரேமுக்குள் அடங்காத கூட்டத்தையும், கலஃபுல்லாக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக பாடல்காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. மற்றபடி எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை. கார்த்திக்கு வருட துவக்கத்தில் இப்படி ஒரு படமா? என அவரது ரசிகர்கள் வருத்தப்படுவது நிச்சயம்.

கார்த்தியை, வா வாத்தியாருன்னு கூட்டிட்டு வந்து, “அம்போன்னு விட்டு விட்டார்”. இயக்குநர் நலன் குமரசாமி!