வாத்தி – விமர்சனம்!

இந்தியாவின் 9 வது பிரதமராக 1992 – ல் பி.வி.நரசிம்மராவ் இருந்தபோது, உலகளாவிய தாராளமயமாக்கல் (Global Liberalization) கொள்கை, இந்தியாவில் ஏற்கப்பட்டு உயர்கல்வியும், தனியார் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அப்போதைய காலக்கட்டத்தில் நடப்பது போன்ற ஒரு சம்பவத்தை ‘வாத்தி’ என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார்கள்.

தனுஷ், சம்யுக்தா நடிப்பினில், தமிழில் ‘வாத்தி’ ஆகவும், தெலுங்கில் ‘சார்’ ஆகவும் வெளியாகியிருக்கிறது. தனுஷுக்கு தெலுங்கில் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். வாத்தி படம் எப்படி இருக்கிறது?

பல தனியார் பள்ளிகளின் நிறுவனராக இருக்கும் சமுத்திரக்கனி, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர். இவர் அரசியல்வாதிகளின் துணையோடு, தனியார் பள்ளிகளில் படிப்பதே சிறந்தது எனும் பிம்பத்தை கட்டமைக்கிறார். இதனை சமுத்திரக்கனியின் பள்ளியில் கணக்கு வாத்தியாராக வேலைபார்க்கும் தனுஷ், தெரிந்து கொண்டு அதனை முறியடிக்க முயற்சிக்கிறார். இதன் பிறகு நடப்பது தான் வாத்தி படத்தின் கதை.

தனுஷ் எந்த கதாபாத்திரமானாலும் அதில் தன்னை இலகுவாக பொருத்தி கொள்பவர். அப்படியே இந்தப்படத்திலும் கணக்கு வாத்தியார் பாலமுருகனாக  கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். அவருடைய நடிப்பிற்கு இப்படம் பெரிய சவால் எதையும் கொடுக்கவில்லை. எளிதான கதாபாத்திரம். உணர்ந்து நடித்துள்ளார்.

தனுஷை விரும்பும் பயாலஜி டீச்சர், மீனாட்சியாக நடித்திருக்கும் சம்யுக்தாவுக்கு நடிப்பதற்கு பெரிய வேலை என்றாலும் கிடைத்த காட்சிகளில் குறை சொல்ல முடியாத அளவில் நடித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா ஒரு காட்சியிலும், சில காட்சிகளில் நடித்திருக்கும்  ஹரீஷ் பெரடி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், கென் கருணாஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதில் கென் கருணாஸூக்கு சற்று அழுத்தமான கதாபாத்திரம். ஆனால் இவர்களுக்கான கதாபாத்திரங்கள் எந்த அழுத்தத்தையும் திரைக்கதைக்கும் கொடுக்கவில்லை, படம் பார்ப்பவர்களுக்கும் கொடுக்கவில்லை! இதற்கு காரணம், இயக்குனர் திரைக்கதையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், பல படங்களில் பார்த்து சலித்த காட்சிகளை அமைத்திருக்கிறார்.

திரைக்கதையில் அழுத்தமாக சொல்லப்படவேண்டிய பல விஷயங்கள் அழுத்தமின்றி சொல்லப்பட்டுள்ளதால், சலிப்பு ஏற்படுகிறது. கல்வி வியாபாரத்தை தோலுரிக்க வேண்டிய காட்சிகளில் இன்னும் பல விஷயங்களை சொல்லியிருக்கலாம்.

பரபரப்பாக இருக்க வேண்டிய தனுஷ் சமுத்திரக்கனி இருவருக்குமான மோதல் காட்சிகளில் போதிய வலிமை இல்லை. அவர்கள் மோதல் தொடர்பான காட்சிகளில் உயிரோட்டம் இல்லை. தனுஷ் முன்னேற விடாமல் சமுத்திரக்கனி ஏற்படுத்தும் தடைகள் எல்லாம் பலவீனமான உத்திகள். அதைவிட பலவீனம், அதிலிருந்து மீள தனுஷ் மேற்கொள்ளும் உத்திகள். வசனங்களில், சில வசனங்கள் கைதட்ட வைக்கிறது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் தனுஷ் எழுதி, ஸ்வேதா மோகன் பாடியுள்ள, ‘வா வாத்தி’ பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், கேட்கலாம். பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கிறது.

அன்று முதல் இன்றுவரை தொடரும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை இன்னும் ஆராய்ந்து பலவற்றினை வெளிக்கொண்டு வந்திருக்கலாம். பரப்பரப்பான சூழலில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த முயன்ற இயக்குனர் வெங்கி அட்லூரியை பாராட்டலாம்.