‘வடக்குப்பட்டி ராமசாமி’  படத்தில் பெரியார் கிண்டல்! – இயக்குநர் கார்த்திக் யோகி!

பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் தயாரிப்பில், நட்டியின் இணை தயாரிப்பில் சந்தானம், மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. படத்தின் நாயகனான சந்தானம் தனது எக்ஸ் தளத்தில் இந்த முன்னோட்டத்தில் இருந்த ஒரு சிறு வசனப் பகுதியை மட்டும் காப்பி செய்து பதிவிட்டிருந்தார்.

அதில் “சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திகிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ..?” என்ற வசனத்துக்கு சந்தானம், ”நான் அந்த ராமசாமி இல்ல” என்று பதில் சொல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்தக் காட்சி வெளியானதும் அரசியல், சினிமா வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால் மேலும் சூடு பிடித்தது இந்த சர்ச்சை.

பெரியாரின் பக்தர்களும், திராவிடர் கழகத்தினரும் இதைக் கண்டித்து பேசவும், எழுதவும் செய்தனர். எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் அந்த வசனம் வரும் டிரைலரை நீக்கிவிட்டார் சந்தானம்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியும், இணை தயாரிப்பாளர் நட்டியும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது இயக்குநர் கார்த்திக் யோகி பேசும்போது, “இது 1970-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் கதை இது. மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் அப்போதுதான் சென்னையில் முதன்முதலாகப் பரவிய காலக்கட்டம். அந்தக் கண் நோய் அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு கிராமத்தில் பரவினால் என்ன நடக்கும் என்ற கற்பனை கதையில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது.

முழுக்க, முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது. கவுண்டமணியும், செந்திலும் நடித்த உத்தமராசா படத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற காமெடி ரொம்பவே பிரபலம். அதனால், அதையே படத்துக்குப் பெயராக வைத்தோம்.

நாங்கள் கவுண்டமணி சாரிடம் இது குறித்து பேசினோம். நான் பேசிய வசனங்களுக்கு எல்லாம் உரிமை என்னிடம் இல்லை என்று அவர் பெருந்தன்மையாக சொன்னார். டிக்கிலோனா படம் ஓடிட்டியில் வெளியானதால் இந்தப் படத்துக்கு அவரை அழைத்து காட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம்.

இந்தப் படத்தில் சந்தானம் கிராமத்து மனிதராக வருகிறார். படத்தில் இடம் பெறும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. ஒரே ஷெட்யூலில் 65 நாட்களில் இந்தப் படத்தை முடித்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் பெரியார் அவமதிக்கப்படவில்லை. அந்த ‘ராமசாமி’ என்ற கதாப்பாத்திரப் பெயரை வைத்து பேசப்பட்ட வசனம் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டது. அது படம் பார்க்கும்போது நிச்சயமாக அனைவருக்கும் புரியும். சந்தானம் தான் போட்ட பதிவு பற்றியும், அதை நீக்கியது பற்றியும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பதில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமோ, அரசியல் நோக்கமோ இல்லை. பொழுதுபோக்குதான் எங்களது முழுமுதற் நோக்கம்..” என்றார்கள்.