‘கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘வனம்’.இப்படத்தினை ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கியுள்ளார்.
‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’, போன்ற படங்களில் வெற்றி மற்றும் ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: விக்ரம் மோகன், இசை: ரான் ஈத்தன் யோஹான், எடிட்டிங் : பிரகாஷ் மப்பு.
‘மறுபிறவி’ மற்றும் அதனை சார்ந்த அமானுஷ்யமான விஷயத்தை மைய்யப்படுத்தி உருவாகியிருக்கும் ‘வனம்’ எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.
வெற்றி, ஓவிய கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாணவராக ஓவியம் பயில்கிறார். அக்கல்லூரியின் விடுதியில் தன்னுடன் பயிலும் இரண்டு மாணவர்களுடன் தங்குகிறார். அப்போது இரண்டு மாணவர்களும் ஒருவருக்கு பின் ஒருவராக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது அவருக்கு சந்தேகத்தையும், பயத்தையும் உண்டாக்குகிறது.
இதனிடையில் இந்த கல்லூரி பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஆவணப்பட இயக்குனரான நாயகி ஸ்மிருதி வெங்கட் இந்த கல்லூரிக்கு வருகிறார். இருவரும் இணைந்து விடுதி அறையில் தங்கி, உயிரிழந்த இரண்டு மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களையும் அதன் பின்னணியையும் கண்டறிய முற்படுகிறார்கள்.
அதன்பிறகு என்ன நடைபெறுகிறது? என்பதே ‘வனம்’ படத்தின் சஸ்பென்ஸ், திரில்லர் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.
ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர், இயக்குநர் ஆகியோரின் கூட்டணி அழகியலை சார்ந்தே இருப்பதால் படத்தின் முதல் பகுதி மெதுவாக நகர்கிறது.
சைக்கோ ஜமீனாக நடித்திருக்கும் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, அந்த வேடத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார். கதாநாயகி ஸ்மிருதி வெங்கட், கதையின் நாயகி அனு சித்தாரா இருவரும் இயக்குநர் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செய்துள்ளனர்.
தன்னை கொடுங்கொலை செய்தவரை பழிவாங்க மறுஜென்மம் எடுக்கும் நபர், அவரை விட்டுவிட்டு மற்றவர்களை கொல்லத்துடிப்பது ஏன்? அழகம்பெருமாள் கதாபாத்திரத்தினை வடிவமைத்து போல் இல்லாமல் வெற்றியின் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பது படத்தின் பெரும் பின்னடைவு.
அவர் நாயகன் வெற்றியை கொல்லாமல் மற்றவர்களை கொல்வது ஏன்?
ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் காட்டியிருக்கும் நேர்த்தியை திரைக்கதையிலும், கதாபாத்திர வடிவமைப்பிலும் காட்டியிருந்தால் ‘வனம்’ வனப்புடன் இருந்திருக்கும்.