அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா, மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முகராஜா, டான்ஸ் மாஸ்டர் தருண், டாக்டர் யோகன் சாக்கோ உள்ளிட்ட பலரது நடிப்பினில் உருவாகியிருக்கும் படம், வணங்கான். ‘வி ஹவுஸ் புரடக்ஷன்’ சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை பாலா எழுதி, இயக்கியிருக்கிறார்.
அருண் விஜய், பேச்சு மற்றும் செவித்திறன் முற்றிலும் அற்றவர். தங்கை ரிதாவுடன் வசித்து வருகிறார். தன் கண் முன்னே நடக்கும் அநியாயத்தை சகித்து கொள்ள முடியாதவர். அப்படி அநியாயம் செய்யும் நபர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர். இவர் கண்பார்வையற்ற பெண்கள் காப்பகத்தில் காவலாளியாக இருக்கிறார். ஒரு நாள் பெண்கள் குளியலறையில் சிலர் பாலியல் தொல்லை கொடுக்க, அவர்களை கொன்று சிதைக்கிறார் அருண் விஜய். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான், பாலா எழுதி இயக்கிய வணங்காண் படத்தின் கதை, திரைக்கதை.
அருண் விஜய், பேச்சு மற்றும் செவித்திறனற்ற இளைஞராக, அந்த கதாபாத்திரத்தில் நடித்து, சிறப்பு சேர்த்திருக்கிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மன நிலையில், வெறித்தபடியே தன் கண்முன்னே நடக்கும் அட்டூழியங்களை அடித்து நொறுக்கும் முரடனாக தோற்றத்திலும், நடிப்பிலும் குறை வைக்கவில்லை! நன்றாக நடிக்கத் தெரிந்த ஒருவருக்கு அந்தக் கதாபாத்திரம் எந்த சவாலையும் கொடுக்கவில்லை! அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தை எளிதாக கையாண்டுள்ளதாகவே தெரிகிறது. சோகம் என்ன என்ன என்றால், இதற்கு முன் பாலா படங்களில் நடித்த நடிகர்களின் சாயல் படம் முழுவதும் தெரிகிறது. பாலாவின் விருப்பம் அப்படி என்றால், அருண் விஜய் மேல் தவறில்லையே!?
நாயகியாக நடித்திருக்கும் ரோஷினி நன்றாக நடித்திருக்கிறார். கலகலப்பான, துறுதுறு நடிப்பில் படம் பார்ப்பவர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார்.
படத்தில் நடித்த எல்லோரையும் விட, அருண் விஜய்யின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா, தனித்துவமான நடிப்பில் அனைவரையும் மிஞ்சி விடுகிறார். நடிப்பதற்கு நல்ல காட்சிகள். அதை அப்படியே சிந்தாமல் சிதறாமல் அள்ளிக்கொண்டுள்ளார். குறிப்பாக சொல்லவேண்டுமானால், கோர்ட்டில் கொடுக்கப்படும் தண்டனை குறித்து தவிக்கும் காட்சியை சொல்லலாம்.
அடுத்தாக மிஷ்கின் நீதிபதி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றபடி, சமுத்திரக்கனி, சண்முகராஜா, அருள் தாஸ், சாயாதேவி (வரலட்சுமி சரத்குமாரின் அம்மா), டாக்டர்.யோஹன் சாக்கோ, தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா ஆகியோர் வந்து போகிறார்கள். இவர்களது நடிப்பு, எந்த விதாமன தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை.
கன்னியாகுமரியை சுற்றிச்சுழன்று படமெடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். இயல்பான, சிறப்பான ஒளிப்பதிவு.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘யாரோ நீ யாரோ’ பாடல் மனதை உருக்குகிறது. சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை, திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
எடிட்டர் சதீஷ் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் ஷில்வா இருவரும் இயக்குநர் பாலாவின் விருப்பப்படி இயங்கியிருக்கின்றனர். சண்டைகாட்சிகளை பாலாவே வடிவமைத்தது போலிருக்கிறது!
முதல் பாதி ஆக்ஷன் காட்சிகளுடன் பரபரக்கிறது. இரண்டாம் பாதி எமோஷனலுடன் ஆங்காங்கே தொய்வுடன்!
மற்றபடி குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை!
வணங்கான் – மாற்றுத்திறனாளிகளுக்கான பாலாவின் குரல்!