வாரிசு – விமர்சனம்!

சரத்குமார், பிரகாஷ்ராஜ் இருவரும் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள். இவர்களிடையே கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கத்தொழிலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கான டெண்டர்களை எடுப்பதில் இருவரும் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். இதில் சரத்குமார் ஒரு படி மேல். இவருக்கு ஶ்ரீகாந்த், ஷாம், விஜய் ஆகிய மூன்று மகன்கள்.  இதில் விஜய்யை தவிர மற்ற இருவரும் அப்பாவுடைய கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறார்கள். இதில் மாறுபட்ட விஜய் மட்டும் அவருடைய விருப்பப்படி தனியாக தொழில் தொடங்க முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜ், தனது தொழில் எதிரியான சரத்குமாரின் குடும்பத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறார். அதில் நிலைகுலையும் சரத்குமார் தனது தொழிலுக்கு வாரிசாக விஜய்யை நியமிக்கிறார். இதனால் கோபமடையும் ஶ்ரீகாந்தும் , ஷாமும் பிரகாஷ்ராஜூடன் சேர்ந்து சரத்குமாரையும், விஜய்யையும் ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது? இதுதான் வாரிசு படத்தின் எளிதில் யூகித்துவிடக்கூடிய கதை.

வாரிசு படத்தின் கதை சிவாஜி உள்ளிட்ட மூத்த நடிகர்களின் படங்கள் முதல் அஜித் நடித்த ‘அசல்’ வரை பல படங்களை நினைவுபடுத்துகிறது.

அனாதையா கிடக்கும் ஹைவேஸ் ரோட்டுல 30 – 35 கிலோமீட்டர் ஸ்பீடுல போவது எப்படி ஒரு அலுப்பைத்தருமோ அதேபோல் படம் ஆரம்பம் முதல் முடிவு வரை பெரிய அலுப்பை தருகிறது. இது போதாதென்று படத்தின் நீளம் வேறு சோதிக்கிறது.

அலுத்துப்போன திரைக்கதையில் வலிய திணிக்கப்பட்ட கேன்சர் நோய். மற்றும் உறவுகளுக்கிடையே சிக்கல்கள். என பார்த்துப் புளித்துப்போன, இடைவேளை, க்ளைமாக்ஸ் இத்யாதி காட்சியமைப்புகள்.

கதை மற்றும் திரைக்கதையில் பெரிய ஏமாற்றத்தை கொடுத்த இயக்குனர் வம்சி பைடிபைலியிடமிருந்து ரசிகர்களை விஜய் காப்பாற்றுகிறார்.

யோகிபாபுவிடம் அடிக்கும் காமெடியிலும், ராஷ்மிகவுடனான பாடல் காட்சிகளிலும் துவண்டு போன ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். படத்தில் உருப்படியான விஷயம் என்றால் அது விஜய் ஆடும் நடனக் காட்சியும், காமெடிக் காட்சியும் தான். டான்ஸ், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் மற்றும் ரொமேன்ஸ் காட்சிகளில் ஆல்ரவுண்டராக அப்ளாஸ்களை அள்ளுகிறார். குறிப்பாக என்னைப்போல் டான்ஸ் ஆடமுடியுமா? என சவால் விடாத குறையாக அவரது டான்ஸ், அட்டகாசம்!

நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ, அவ்வளவு காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளுக்காக மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். நடிப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை!

பல திறமையான நடிகர்களான விஜயின் அப்பாவாக நடித்திருக்கும் சரத்குமார், விஜயின் அம்மாவக நடித்திருக்கும் ஜெயசுதா, விஜயின் அண்ணன்களாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், ஷாம். வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், சரத்குமாரின் குடும்ப டாக்டராக நடித்திருக்கும் பிரபு உள்ளிட்ட பல நடிகர்களின் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரசிகர்களின் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை! இதற்கு அழுத்தமில்லாத வசனமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பாடல்காட்சிகளை கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி. தமனின் இசையில் ‘ரஞ்சிதமே…’ பாடலை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டிருந்தாலும் திரையில் பார்க்கும்போது ‘ஒன்ஸ்மோர்’ கேட்கும் பாடலாகவே இருக்கிறது. பின்னணி இசை அசௌகரியத்தை கொடுக்கிறது. விஜய் ஒரு காட்சியில்ல ‘போடுற பிஜிஎம்ம…ன்னு’ சொல்லுவாரு அப்போ எப்படியிருந்திருக்கனும்!? அது மிஸ்ஸிங்!

படத்தின் நீளத்தை குறைக்க பல காட்சிகள் இருந்தாலும் அப்படியே விட்டுள்ளார், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்.

இயக்குனர் வம்சி பைடிபைலியுடன் சேர்ந்து 3 பேர் சேர்ந்து கதை எழுதியிருக்கிறார்களாம். ஆளுக்கொரு படத்திலிருந்து கதையை உருவியிருப்பார்கள் போல!

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விஜயை மட்டும் வைத்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார், இயக்குனர் வம்சி பைடிபைலி.

மொத்தத்தில், ‘வாரிசு’ இடைவேளையில்லா டிவி சீரியல்! இது பெண்களுக்கு பிடிக்கும்!