சிம்ஹா நடித்துள்ள ‘வசந்த முல்லை’ ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர்!

‘பேட்ட’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்ஹா நடிப்பினில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் படம் ‘வசந்த முல்லை’. இப்படத்தினை ‘மதி மயங்கினேன்’, ‘பட்டர்ஃப்ளை’ உள்ளிட்ட குறும்படங்களை இயக்கிய இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கியிருக்கிறார்.

‘வசந்த முல்லை’ திரைப்படத்தின் கன்னட மொழி முன்னோட்டத்தை, ‘சூப்பர் ஸ்டார்’ சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் நேற்று வெளியிட்டனர்.

‘வசந்த முல்லை’ திரைப்படத்தில் சிம்ஹா கதையின் நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

‘வசந்த முல்லை’ திரைப்படத்தை முத்ரா’ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘வசந்த முல்லை’ திரைப்படத்தின் இயக்குநர் ரமணன் புருஷோத்தமா படம் குறித்து கூறியதாவது…

‘வசந்த முல்லை’ படத்தின் திரைக்கதை ஒரே இரவில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். மலை பாங்கான பகுதி… இருட்டு… தொடர் மழை.. என பயணிக்கும். நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பு வியப்பை அளித்தது. அதிலும் குறிப்பாக நாயகி கஷ்மீரா பர்தேசி, மழைபெய்யும் காட்சிகளில் நடுங்கும் குளிரில் முழுமையான அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார். இந்தப்படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயர். அதோடு இந்த திரைப்படத்தின் உயிர்நாடி இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசை தான். ஒரு வித்தியாசமான படம் பார்த்த அனுபவத்தை இந்தப்படம் தரும்’. என்றார்.

பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ‘வசந்த முல்லை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ,கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.