‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்’ வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழினி கலைக்கூடம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில்,

”தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் ‘வீர தமிழச்சி’ உருவாக்கப்பட்டிருக்கிறது.  இந்த திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளோம். இந்த ‘வீர தமிழச்சி’யை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து, வெற்றி தமிழச்சியாக மாற்றி தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை சுஷ்மிதா சுரேஷ் பேசுகையில்,

”வீர தமிழச்சியாக என்னை தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் என்னுடைய பாதுகாப்பையும், என்னுடைய சௌகரியத்தையும் மனதில் வைத்து பணியாற்றினார். குறிப்பாக நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியில் நடிக்கும் போது நான் பயந்தேனோ, இல்லையோ அவர் பயந்து கொண்டே இருந்தார். என் மீது அக்கறை செலுத்தி பாதுகாத்த ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் நடிக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது உடலில் வலி உண்டானது, இருந்தாலும் பொறுத்துக் கொண்டு படக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக பழகினார்கள். அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெண்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்- அதனை எப்படி வெளிக் கொண்டு வரலாம் என்பதை கற்றுத் தரும் படமாக இது இருக்கும்.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான எனக்கு ஏன் நடிப்பு என பலர் கேள்வி கேட்டனர். ஆனால் என்னுடைய விருப்பம் நடிப்பாக இருந்ததால் ஆடிஷனுக்கு பொறுமையுடன் என்னுடைய பெற்றோர்கள் வருகை தந்து ஆதரவை வழங்கினார்கள்.  நிறைய பெண்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் சுரேஷ் பாரதி பேசுகையில்,

”அடிமட்ட கட்டிட தொழிலாளியாக 35 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த நான் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறேன் என்றால், இதற்கு முதல் காரணம் என்னுடைய மனைவி மற்றும் மகன்கள் தான். இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். இந்த ஐந்து வருடங்களிலும் என்னையும், என் குடும்பத்தையும் வழிநடத்திச் செல்வது என் மனைவி தான்.

2016 ஆம் ஆண்டில் என்னுடைய  ‘கொஞ்சம் கொஞ்சமாக..’ எனும் முதல் குறும்படத்திற்கு, சிதம்பரம் காட்மாடி பகுதியை சேர்ந்த என் குருநாதர் பழனிச்சாமி தான் ஒரு லட்ச ரூபாயை வழங்கினார். இந்த குறும்படம் சிறந்த விழிப்புணர்வுக்கான குறும்படம் என தேர்வு செய்யப்பட்டு,  தமிழக முதல்வரிடம் விருதினை பெற்றேன். என்னுடைய இரண்டாவது குறும்படமான ‘தாய்’. இணையத்தில் வெளியாகி இதுவரை 46 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. இதுவரை நான் 18 குறும்படங்களை இயக்கியிருக்கிறேன், 36 விருதுகளை வென்றிருக்கிறேன். நான் இயக்கினால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெறும் படைப்பை தான் இயக்குவேன் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதற்குப் பிறகு ஒரு கதையை சினிமாவுக்காக தயார் செய்துவிட்டு ஏராளமான தயாரிப்பாளர்களை அணுகி கதையை சொன்னேன். மகிழினி கலைக்கூடத்தில் கதையை சொன்னேன்.‌ அவர்களால் படத்தை தயாரிக்கும் அளவிற்கு பொருளாதாரமில்லை, அதனால் இந்த திரைப்படத்தை கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாக்கத் தொடங்கினோம். ஒரு வார காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை அறிந்து தயாரிப்பாளர் நித்தியானந்தம் எங்களுடன் இணைந்தார்.‌ அதன் பிறகு முழு படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று அவர் சொன்னார். என்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து என்னுடைய இயக்குநர் கனவை நனவாக்கியவர் தயாரிப்பாளர் நித்தியானந்தம். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்தப் படத்தை தொடங்கும் போது 60 லட்சம் ரூபாய் தான் பட்ஜெட் என்றேன். ஆனால் தற்போது மூன்றரை கோடி ரூபாயில் படம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த திரைப்படம் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படம். பெண்கள் எங்கு எப்போது பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வர வேண்டும், இதற்கு என்ன தீர்வு என அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் உள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

இந்தப் படத்தின் மூலம் நான் என்ன சொல்ல விரும்பினோனோ அது ஆறு மாதத்திற்கு முன்னதாக தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் சட்ட திருத்தமாக கொண்டு வந்திருக்கிறார். நான் இது தொடர்பாக படம் எடுத்தது மூன்று ஆண்டுகளுக்கு முன். நான் மக்களுக்கு எதனை தீர்வாக சொல்ல நினைத்தேனோ அதை சட்ட திருத்தமாக கொண்டுவரப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை. இந்த படம் ஆறு மாதம் மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தால் எங்கள் கதை தான் ஹீரோ. இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரமும் இருக்கிறது.

நான் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகன். கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தியை கேட்டு மூன்று நாட்கள் உறக்கமில்லாமல் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தேன். கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களை பார்த்து தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். விஜயகாந்தை வைத்து நான் என்ன திரைப்படத்தை இயக்க வேண்டும்cஎன நினைத்தேனோ, அவர் இல்லாததால் ஒரு புது ஹீரோயினை வைத்து இயக்கியிருக்கிறேன். அந்த வகையில் ஒரு பெண் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

ஆர்.வி. உதயகுமார், பேரரசு போன்றவர்களை பார்த்து ஆக்ஷன் திரைப்படங்களை இயக்க வேண்டும் என ஆசை. தமிழ் மொழியில் இல்லாமல் வேறு மொழியில் 50க்கும் மேற்பட்ட ஆக்ஷன் திரைப்படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோயின் ஆக்ஷன் செய்தால் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏராளமான ரெஃபரன்ஸ்களை பார்த்த பிறகு தான் படத்தின் நாயகியான சுஷ்மிதா சுரேஷுக்கு ஆக்ஷன் காட்சிகளை நானும் ஸ்டாண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவும் விவாதித்து வைத்தோம்.

ஒரு தமிழ் பெண்ணை தலைகீழாக கட்டி வைத்து தொங்கவிட்டு அவருடைய நெஞ்சில் கால் வைத்து எட்டி உதைக்கும் காட்சியை வைத்திருக்க மாட்டார்கள், இத்தகைய காட்சி தமிழ் சினிமாவில் முதன் முதலாக இந்தப் படத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் எந்த தமிழ் படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை.  இந்தக் காட்சியில் நடிப்பதற்கு நடிகை சுஷ்மிதா முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

நான் இதுவரை எந்த படப்பிடிப்பையும் வேடிக்கை கூட பார்த்ததில்லை. ஆனால் ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு என்னுள் ஐக்கியமாகி இருக்கும் விஜயகாந்த் தான் காரணம்.  இன்று கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கேப்டன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். அதனால் அவருடைய ஆசி இந்த படத்திற்கு பரிபூரணமாக இருக்கும்.

மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருக்கும் திறமை இருக்கிறது. அதனை வெளிக்கொணர வேண்டும். எவரையும் பார்த்து அஞ்ச கூடாது. எவரையும் பார்த்து பிரமிக்க கூடாது. உனக்கு திறமை இருந்தால் வெற்றி பெறலாம். இதற்கு முன்னுதாரணமாக நான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் இயக்குநராகி இருக்கிறேன். ‌எங்கள் ஊரில் சாதாரண கட்டிட தொழிலாளியான எனக்கு இன்று கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 25 கட் அவுட்கள் வைத்திருக்கிறார்கள்,” என்றார்.