வேலூர் வாக்குச்சாவடியில் கொள்ளை..!

வேலூர் தொகுதிக்கு நாளை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

 

இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலுள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் சிசிடிவி கேமரா, கணினிகள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் வேலூர் தொகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

எண் 29,30,32 ஆகிய  எண்களைக் கொண்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கான  அனைத்து ஏற்பாடுகளைச் செய்த பின் அந்த பள்ளி மூடப்பட்டது. இன்று காலையில் கிராம நிர்வாக அலுவலர்  பார்த்த போது, பள்ளிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இது குறித்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த குடியாத்தம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேற்படி விசாரணையில் 30ஆவது வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும், பள்ளியில் இருந்த 11 கணினிகளும் திருடு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.