‘வெப்பம் குளிர் மழை’ – விமர்சனம்!

ஹேஷ்டேக் FDFS’ புரொடக்‌ஷன்ஸ் சார்பில், திரவ் தயாரித்து, நடித்து, எடிட் செய்திருக்கும் படம், வெப்பம் குளிர் மழை. இப்படத்தை, அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியிருக்கிறார். இவர், இயக்குநர் பிரம்மாவின் உதவியாளர். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி  ஆகியோர் நடித்துள்ளனர்.

‘வெப்பம் குளிர் மழை’  திரைப்படத்தின் கதையினை, அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்துவின் கிராமத்தில் நடந்த, சில சம்பவங்களை தொகுத்து கற்பனை கலந்து உருவாக்கியிருக்கிறார்.

இயற்கையாக, மழை பெய்வதற்கு ‘வெப்பம் குளிர்’ இந்த இரண்டும் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல் தம்பதியினர் இருவரும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் கூடினால் குழந்தை பிறப்பினில் எந்த சிக்கலும் இல்லை! என்ற கருத்தினை முன் வைக்கிறார், இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.

திரவ், இஸ்மத் பானு இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் தம்பதியினர். திரவ், செயற்கை முறை கருத்தரித்தலுக்கு, மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை செய்து வருகிறார். திருமணமாகை 5 வருடங்கள் குழந்தை இல்லாமல் வாழ்ந்து வரும் இவர்கள், இல்லற வாழ்விலும் சுகமாமகவே இருந்து வருகின்றனர். ஆனால், ஊரார் பேச்சுக்கள் இவர்களை காயப்படுத்தி வருகிறது. இஸ்மத் பானுவின் மாமியார் ரமா, ஊர்காரர்களை விட ஒரு படி மேலே சென்று. வேறு ஒரு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். ஊராரின் கேலிப்பேச்சும், வேரொரு திருமணமும் தம்பதிகளிடையே இறுக்கத்தினை உருவாக்குகிறது.

திரவ், இஸ்மத் பானு இருவரும் டாக்டரின் உதவியை நாடுகின்றனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர், திரவ்விடம் குறையிருப்பதாக கூறுகிறார். இந்த விஷயத்தினை, இஸ்மத் பானு மறைத்துவிடுகிறார். ஊராரின் பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து, திரவ், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். குழந்தை பிறந்தால் மட்டுமே, இதற்கு தீர்வு என்ற நிலையில்,  இஸ்மத் பானு ஒரு முடிவு எடுக்கிறார். அது, மிகப்பெரிய ஒரு பிரச்சனையை உருவாக்குகிறது. அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன? என்பதே, வெப்பம் குளிர் மழை, படத்தின் கதை.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி, மாவிடுதிக்கோட்டை. கதைக்களம், இந்த பகுதியில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  பெரும்பாலான காட்சிகள், இந்த ஊரின் மாரியம்மன் கோவிலைச் சுற்றியே படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊரின் லொக்கேஷன்கள் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது.

அழுத்தமான கதாபாத்திரத்தில், தன்னை அழகாக பொருத்திக்கொண்டிருக்கிறார், கதையின் நாயகன் திரவ். மனைவி இஸ்மத் பானுவுடனான கூடலிலும், ஊடலிலும் மிகச்சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தி, வெகு இயல்பாக காட்சிகளை நகர்த்திச் செல்கிறார். ஊர் மக்களின் பேச்சிற்கு ஆளாக நேரும் தருணத்திலும், மனைவியின் வற்புறுத்தலில் ஆஸ்பத்திரிக்கு செல்ல சம்மதிக்கும் தருணத்திலும், ‘பெத்த பெருமாளாகவே’ வெகு இயல்பாக நடித்திருக்கிறார்.

இஸ்மத் பானு, இவருடைய கதாபாத்திரம் மிக அழுத்தமானது. மாவிடுதிக்கோட்டையில் வாழ்ந்த ஒரு பெண்ணாக, தன்னை, ‘பாண்டியம்மா’ என்ற கதாபாத்திரத்திற்குள் பொருத்தியிருக்கிறார். இவர், நடிப்பதற்கு படம் முழுவதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை மிகச்சிறப்பாக கையாண்டு தன்னை ஒரு பண்பட்ட  நடிகையாக நிலை நிறுத்தியிருக்கிறார். தன்னுடைய உடல் மொழியால் அனைவரையும் எளிதாக வசியம் செய்து விடுகிறார். இந்த ஒரு படத்திலேயே பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். கணவருடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளிலும், மாமியார் ரமாவுடன் சண்டையிடும் காட்சிகளிலும் சிறப்பாக நடிப்பதுடன் பாண்டி கதாபாத்திரத்தை உயர்த்திப்பிடித்திருக்கிறார்.

அடுத்தபடியாக, கவட்டைக்காலுடன் ஊரைச்சுற்றி வலம் வரும், குசும்பு பிடித்த கிழவராக எம். எஸ். பாஸ்கர். சூப்பர்.

இவர்களைப் போலவே, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி,  திரவ்வுடன் வரும் கருப்பு என அனைவருமே சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவும், சங்கர் இசையும் சிறப்பு. பாடல்களில் மண்வாசம்!

நாயகனாக நடித்து, படத்தை தயாரித்து, பாடல்கள் எழுதி, கவனம் பெற்றிருக்கும் திரவ் தான், எடிட்டிங்கும் செய்திருக்கிறார். தேயைற்ற, காட்சிகளின் நீளத்தினை குறைத்திருக்கலாம். செய்திருந்தால், படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

படத்தின் மிகப்பெரிய பலம், சிவகங்கை மாவட்ட, வட்டாரப் பகுதியின் மொழியும், அந்த வார்த்தைகளைப் பேசும் விதமும் தான்.

கிராமத்து பின்னணியில், சமூகத்திற்கு தேவையான, ஒரு மிகப்பெரிய விஷயத்தினை, எதார்த்தமாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.

‘வெப்பம் குளிர் மழை’ தம்பதிகள் பார்க்கவேண்டிய படம்!