‘விடாமுயற்சி’ – விமர்சனம்!

சுபாஸ்கரனின்  ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து, அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், விடாமுயற்சி.  இப்படத்தினை, ஹாலிவுட் படமான ‘BREAK DOWN’ (பிரேக் டவுன்) படத்தினை தழுவி, சில மாறுதல்களுடன் எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் மகிழ் திருமேனி.

‘BREAK DOWN’ (பிரேக் டவுன்) திரைப்படம், அஜித்குமாரை இம்ப்ரஸ் செய்ததா? மகிழ் திருமேனியை இப்ம்ரஸ் செய்ததா தெரியவில்லை. இந்தப்படம் ஒரு சாதரண க்ரைம் த்ரில்லர். கொஞ்சம் கூட ஹீரோயிசமில்லாத படம். ஆனால், சீட் துணியில் உட்கார வைத்துவிடும் அதனுடைய திரைக்கதை. அஜித்குமார் போல் ஒரு மாஸான ஹீரோவுக்கு இந்தப்படம் எப்படி பொருந்திருக்கு? பார்க்கலாம்.

அசர்பைஜான் நாட்டில் வசித்து வரும் அஜித்குமார், த்ரிஷா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர். இந்நிலையில், த்ரிஷாவிற்கு வேறு ஒருவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அஜித்குமாரிடமிருந்து பிரிய முடிவு செய்கிறார். அதன் காரணமாக இருவரும் சுமூகமாக பிரிய முடிவு செய்கின்றனர். அஜித்குமார், தன்னுடைய காரில் திரிஷாவை அழைத்துக் கொண்டு, மக்கள் அதிகம் பயண்படுத்தாத சாலை வழியே அவரது வீட்டுக்கு செல்கின்றனர்.

அதே சாலை வழியாக காரில் செல்லும் ஆரவ், இவர்களது காரினை இடிப்பது போல் வர சுதாரித்துக் கொண்டு கார் இடிப்பதை தவிர்த்து விடுகிறார், அஜித். இந்த சம்பவத்தால், அஜித்துக்கு, ஆரவ் மீது கோபம் உண்டாகிறது. தொடர்ந்து, அதே சாலையில் பயணிக்கும் போது அஜித் – த்ரிஷா செல்லும் கார் ரிப்பேர் ஆகி நின்றுவிடுகிறது.

அஜித் – த்ரிஷா ஆகியோருக்கு, அந்த சாலை வழியாக வரும் அர்ஜூன் – ரெஜினா கசாண்ட்ரா இருவரும் உதவ முன் வருகிறார்கள். அதன்படி, த்ரிஷாவை வ்ழியிலிருக்கும் ஒரு ஹோட்டலில் இறக்கிவிடுவதாக சொல்கிறார்கள்.  இதனால், த்ரிஷா மட்டும் அர்ஜூன் – ரெஜினா கசாண்ட்ராவுடன் பயணிக்கிறார். அஜித் காரினை ரிப்பேர் செய்ய முயற்சிக்கிறார். கார் சரியாகிறது.

அஜித், அர்ஜூன் – ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர், த்ரிஷாவை இறக்கி விடுவதாக சொன்ன ஹோட்டலுக்கு வருகிறார். த்ரிஷா அங்கு இல்லை. குழப்பத்திலிருக்கும் அஜித் அடுத்தடுத்த இடங்களில் த்ரிஷாவைத் தேடி அலைகிறார். த்ரிஷா கிடைத்தாரா, இல்லையா? அஜித் – த்ரிஷா மீண்டும் இணைந்தனரா? என்பதே விடாமுயற்சி.

அஜித்தின் மொத்த ஹீரோயிசமும் மூட்டைக்கட்டி வைக்க வேண்டிய கதை என்பதால், ரசிகர்கள் கைதட்டி ஆராவாரம் செய்யும் காட்சிகள் இல்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம். ஆனால், இடைவேளைக்கு பிறகு ஹீரோயிசத்துகான வேலையை, இயக்குநர் மகிழ் திருமேனி செய்திருக்கிறார்.

படம் துவங்கிய முதல் அரை மணி நேரம், த்ரிஷா அஜித் காதல் சமாச்சாரங்கள். 4 விதமான தோற்றத்தில் அஜித். அஜித் – த்ரிஷா இருவருமே அழகு. மகிழ்ச்சியாக யூத்தான  அஜித், த்ரிஷா ஆடல் பாடல் சூப்பர்.

த்ரிஷாவைத்  தேடி அலைகின்ற காட்சிகளிலும், இன்ஸ்பெக்டரிடம் தன் மனைவி கடத்தப்பட்டிருக்கிறார், என சொல்ல முற்படும் காட்சிகளிலும் சிறந்த  நடிப்பினை அஜித் காட்டியிருக்கிறார். அதேபோல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார், அஜித்- ஆரவ் கோஷ்டிக்கு இடையே காரில் நடக்கும் காட்சி சூப்பர்.

த்ரிஷா, இளமை குன்றாமல் இருக்கிறார். ஆனால், நடிப்பு பரவாயில்லை! என்னத்தையோ வந்தோம். வசனங்களைப் பேசினோம் அளவில் வந்து செல்கிறார்.

மெயின் வில்லனாக அர்ஜுன். ஆக்‌ஷன் மட்டுமே கை கொடுத்திருக்கிறது. நடிப்பு பரவாயில்லை!

அர்ஜூன் மனைவியாக ரெஜினா. சூப்பர்! தனது இருப்பினை, நடிப்பின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சைக்கோ வில்லியாக கிடைத்த காட்சிகளில் எல்லாம் முத்திரை பதித்திருக்கிறார்.

விடாமுயற்சி படத்தின் முதல் பலமும் முக்கிய பலமுமாக இருப்பது ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், அசர்பைஜானையும் சண்டைகாட்சிகளையும் பாராட்டும்படி ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக, காருக்குள் நடக்கின்ற சண்டைக் காட்சியை படமாக்கிய விதம் அருமை.

இரைச்சலில்லாத இசையமைத்திருக்கிறார், அனிருத். காட்சிகளுக்கேற்றபடி பின்னணி இசை அமைந்திருக்கிறது. சூப்பர்! பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது.

அஜித்தின் வழக்கமான ஆரவாரமில்லாமலும், இயக்குநர் மகிழ் திருமேனியின் டச் இல்லாமலும் இருக்கிறது விடாமுயற்சி. இருந்தாலும், போரடிக்காமல் ஒரு விறுவிறுப்பான படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.