நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ ஆச்சரியங்களை தாங்கி வருகிறது
தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். எண்ணற்ற விளம்பர படங்களை இயக்கியதற்கு பின்னர் திரைப்படத்துறையில் தனது லட்சிய பயணத்தை தொடர்வதற்காக ‘நொடிக்கு நொடி’ எனும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது.
நாக்ஸ் ஸ்டுடியோஸ்’ ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் ‘செம்பி’ புகழ் அஷ்வின் குமார், ஷியாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனரஞ்சகம் மிக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது ‘நொடிக்கு நொடி’.
திரைப்படம் குறித்து பேசிய விஜய் ஆதிராஜ்,
“விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு ‘நொடிக்கு நொடி’ மூலம் நனவகிறது.
பரபரப்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை வெளியாகும் போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்,” என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய் ஆதிராஜ்,
“அம்ரேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகவும் திறமையான இசைக் கலைஞரான அவரது முழு பரிமாணமும் இப்படத்தில் வெளிப்படும். நான் இயக்கிய ‘புத்தகம்’ படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் முன்னணி எடிட்டராக திகழும் கெவின் ‘நொடிக்கு நொடி’ திரைப்படத்தின் தொடர்பை கையாளுகிறார். நம்ரிதா, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் மேகா ராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவுக்கு கோபிநாத், கலை இயக்கத்திற்கு ராமலிங்கம், நடனத்திற்கு ராஜு சுந்தரம், சண்டை பயிற்சியாளர் தினேஷ் காசி என முன்னணி கலைஞர்கள் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். நிர்வாக தயாரிப்பாளர்கள்: ஜி கண்ணன் & பாலு கே நிமோ. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் ‘நொடிக்கு நொடி’யை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.