விஜய் சேதுபதி 51 வது படத்தின்  படப்பிடிப்பு மலேசியாவில் நிறைவுற்றது!

7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில்,  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில்,  இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில், ஆக்சன் காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதி 51 படத்தின்  படப்பிடிப்பு,  மலேசியாவில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.  ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்து அம்சங்களுடன் முழு நீள  கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சைனீஸ் சண்டைக்ககலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொள்ள,  பிரம்மாண்ட  சண்டைக்காட்சியும் சேஸிங் காட்சியும் மலேசியாவில் திரையில் இதுவரை காணாத  இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது படக்குழு. மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அனைத்து இடங்களில்  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். படம் முழுதும் பயணிக்கக்கூடிய முக்கிய பாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.  இவர்களுடன் பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவங்கவுள்ளது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.