ரோமியோ – விமர்சனம்!

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம், ரோமியோ. அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, மிருனாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை, தமிழகம் முழுவதும் உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘ரோமியோ’, தெலுங்கில் ‘லவ் குரு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

“மொரட்டு ரொமான்ஸ், மில்க் அண்ட் விஸ்கி” என்ற கேப்ஷனுடன், மிருனாளினி ரவி கையில் மது பாட்டிலுடன் காணப்பட்ட, ’ரோமியோ’ படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ர்பினை உருவாக்கியிருந்தது.  ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.

விஜய் ஆண்டனி வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊர் திரும்புகிறார். எப்படியாவது தனக்கு பிடித்த பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொள்வதை லட்சியமாக கொண்டிருக்கிறார். மிருனாளினி ரவி, சினிமாவில் சாதித்து எப்படியாவது மிகப்பெரிய கதாநாயகி ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு, மிருனாளினி ரவியை கண்டவுடன் காதல் பிறக்கிறது. இவருக்கும் சினிமாவில் பெரிய கதாநாயகி ஆகவேண்டும், என்ற லட்சியத்துடன் இருக்கும் மிருனாளினி ரவியை, விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். மிருனாளினி ரவிக்கு இதில் விருப்பமில்லை. இருந்தாலும் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு சம்மதிக்கும் அவர், விஜய் ஆண்டனிக்கு சில நிபந்தனகளை விதிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்த்து? என்பது தான் ஜாலியான, எமோஷனாலான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

இதுவரை, அழுத்தமான, சோகமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி, அறிவு என்ற ஒரு ஜாலியான கதாபாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு ரொமான்ஸ் சூப்பராகவே வருகிறது. தன்னை வெறுக்கும் மிருனாளினி ரவியை, ஒரு தலையாக காதலிக்கும் அறிவு கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத, ஒரு புதிய விஜய் ஆண்டனியை பார்ப்பது போல் இருக்கிறது. துடிப்பான நடனத்திலும், அப்பாவித்தனமான காமெடியிலும் கவர்ந்திழுக்கிறார். மொத்தத்தில், ஒரு புதிய விஜய் ஆண்டனியாக தெரிகிறார்.

வழக்கமாக வந்துபோகும் கதாநாயகியாக அல்லாமல், திரைக் கதையோடு பயனிக்கும் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மிருனாளினி ரவி. நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் காதலுக்கு, டிப்ஸ் கொடுக்கும் கதாபாத்திரத்தில் யோகிபாபு, அவரையே கலாய்த்து தள்ளும் காட்சிகளில் சிரிப்பு! காமெடிக் காட்சிகளில் குறையில்லை!

மற்றபடி, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, சுதா, ஷாரா ஆகியோரின் நடிப்பும், திரைக்கதைக்கு பலமாகவே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது.

இப்படத்தின் மூலம் அறிமுகமாகும், இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில், பாடல்கள் கேட்கக் கூடியாதாக இருக்கிறது. பின்னணி இசை, குறையில்லை..

பெண்கள், அவர்களுக்கான கனவுகள், என, பெண்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், திரைக்கதை அமைத்திருக்கிறார், எழுதி, இயக்கியிருக்கும், அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். பெண்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள். என்ற மெஸேஜினை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்.

மற்றபடி, படத்தின் நீளத்தினை சற்று குறைத்து, ஆங்காங்கே ஏற்பட்ட தொய்வுகளை தவிர்த்து, திரைக்கதைக்கு தடை ஏற்படுத்தும் பாடலை நீக்கியிருந்தால், இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.

ரோமியோ – ரசிக்கத் தக்கவன்!