‘எலக்சன்’ படம், எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை.’ –  உறியடி விஜய்குமார்!

‘ரீல் குட் பிலிம்ஸ்’ சார்பில், ஆதித்யா தயாரிப்பில் ‘உறியடி’ விஜய்குமார் நடித்துள்ள படம் எலக்சன். கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் ரிச்சா ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை ‘சேத்துமான்’ இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கிறார். மே 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

எலக்சன் படம் குறித்து இப்படத்தின் வசனகர்த்தா, அழகிய பெரியவன் பேசுகையில்,

‘இந்த கதையை எழுதிவிட்டு, என்னை சந்தித்து கதையை வாசிக்க சொன்னார் இயக்குநர் தமிழ். அவருடைய கதையை முழுவதுமாக படித்து முடித்தவுடன் எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஏனெனில், இந்தக் கதை முழுக்க முழுக்க அரசியலைப் பற்றி பேசுகிறது. ஆனால், அரசியலை மட்டும் பேசவில்லை. மனிதர்களுடைய குணாதிசயங்களை… கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய மனிதர்களின் குணங்களை… என எல்லாவற்றையும் கலந்து பேசுகிறது. அற்புதமான திரைக்கதையாகவும் இருந்தது.

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சொல்கிறது. நீங்கள் ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய.. சமத்துவம் என்று சொல்லக்கூடிய.. ஒரு கருத்தியலை… ஒரு அரசியல் கட்சியிடம்.. ஒரு அமைப்பிடம்.. தராமல்.. மக்களிடம் தந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஜனநாயகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்?  ஒரு எளிய மனிதனிடம் அதிகாரம் சென்று சேரும் போது அதை அவன் எப்படி உள்வாங்கிக் கொள்கிறான்?  எப்படி அதை பயன்படுத்துகிறான்? என்பதை இப்படம் சொல்கிறது.

ஜனநாயகம் என்றால் என்ன? என்ற கேள்வியை இந்த திரைப்படம் நிச்சயம் மக்களிடத்தில் எழுப்பும் என்றும் நான் கருதுகிறேன்.’ என்றார்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு பேசுகையில்,

‘இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. வேலூர் என்றாலே வறட்சியான பகுதி தான் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் அழகான கிராமங்கள் இருக்கிறது. அதனை இந்த திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.  சினிமாவில் இதுவரை பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் உள்ள  பசுமையான கிராமங்களை காண்பித்திருக்கிறார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் இடம் பெறாத  அழகான கிராமங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.’ என்றார்.

நடிகர் பாவெல் நவகீதன் பேசுகையில்,

‘எலக்சன்’ திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்றால்..?  இது ஒரு அரசியல் படம். நூற்றுக்கு எழுபது சதவீத பேருக்குத் தான் அரசியல் தெரிந்திருக்கும். மீதமுள்ளவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நம்மை சுற்றி எந்த மாதிரியான அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலை இந்த எலக்சன் திரைப்படம் உங்களுக்கு உணர்த்தும். எனவே இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் திலீபன் பேசுகையில்,

‘படத்தின் திரைக்கதையை வாசிக்குமாறு இயக்குநர் தமிழ் கேட்டுக்கொண்டார். படித்தவுடன் வியந்தேன். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்த விசயத்தில் கட்சி தலைமை சொன்னால் கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்குள் ஒரு உடன்பாடு… பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு… போன்ற பயங்கரமான அரசியல் பின்னணி உண்டு. இதனை அடிப்படையாக வைத்து வாழ்வியலை படமாக எடுத்திருக்கிறார்.  இந்தப் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உண்டு அனைவரும் பேசப்படுவார்கள்.

நடிகர் விஜய்குமார் உடன் பணியாற்றுவது எளிதானது அவர் இயக்குநராகவும் இருப்பதால்.. இந்தக் காட்சியில் இதை செய்தால் போதும் என்று எப்போதும் குறிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டே இருப்பார். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.  அதை அவரிடமே தெரிவித்திருக்கிறேன். ” என்றார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில்,

‘அயோத்தி’ திரைப்படத்திற்கு பிறகு நான் ‘எலக்சன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘எலக்சன்’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்திருப்பீர்கள். ரசித்திருப்பீர்கள். உண்மையில் இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநருக்கும், நடிகர் விஜய் குமாருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’என்றார்.

படத்தின் நாயகனான விஜய்குமார் பேசுகையில்,

‘உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல்,  அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி… உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாகத்தான் இந்த படம் தயாராகி இருக்கிறது.

படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு… இந்த கதையின் முதுகெலும்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டரை தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல்  மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்பா… பெரியப்பா… சித்தப்பா.. மாமா.. என யாரேனும் ஒருவரை பார்த்திருப்போம்.

‘அமாவாசை’ போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது. இப்படி இருப்பவர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது.. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது. தயாரிப்பாளர் ஆதித்யாவுடன் இது இரண்டாவது படம். அவருடனும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.’ என்றார்.

இயக்குநர் தமிழ் பேசுகையில்,

‘புகழ், பணம், போதை, பெண்… இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன். எனது இயக்கத்தில் வெளியான ‘சேத்துமான் திரைப்படம் பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டது. இந்தப் படம் அது போல் எளிதாக தொடர்பு கொள்ளுமா? கொள்ளாதா? என்ற அச்சத்தில் இருக்கிறேன்.

நான் விஜயகுமாரிடம் எலக்சன் படத்தின் திரைக்கதையை கொடுக்கும்போது வசனத்தில் ‘ஸ்லாங்’ இல்லை. மேலும் வசனங்களில் அழுத்தம் வேண்டும் என்றும் விரும்பினேன். இதற்காக உதவியவர் தான் எழுத்தாளர் அழகிய பெரியவன்.  அவரை எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் அறிமுகப்படுத்தினார். அவர் படத்திற்கு வசனம் மட்டும் எழுதவில்லை.

படக்குழுவினருடன் இணைந்து ஆர்வமுடன் பயணித்து பல படப்பிடிப்பு தளங்களை அடையாளம் காட்டினார். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.