பிரபல யூடியூபரும் ஊக்கமூட்டும் பேச்சாளருமான ராஜ்மோகன், ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
விருமாண்டி திரைப்படத்தில் அன்னலட்சுமி கதாபாத்திரத்தில், கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை அபிராமி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதேபோல் ஒரு குழந்தையின் அம்மாவாக, ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படத்தில் நடிப்பதன் மூலம், நடிகை அபிராமி மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார். என கூறுகிறார், இயக்குனர் ராஜ்மோகன்.
இயக்குநர் ராஜ்மோகன் மேலும் கூறியதாவது…
‘பாபா பிளாக் ஷீப்’ பள்ளிக் குழந்தைகளின் உலகத்தை சொல்லும் ஒரு நல்ல திரைப்படம். ஒரு குழந்தையை பெற்று வளர்த்து பள்ளிக்கூடத்தில் சேர்த்து கண்ணும் கருத்துமாக வளர்க்கும் ஒரு அம்மாவின் வலிமையான கதாபாத்திரம். அதற்கான நடிகையை தேடி வந்த நிலையில் நடிகை அபிராமியை அணுகினோம். கதையை கேட்டவுடன் உடனே ஒகே சொல்லிவிட்டார்.
‘பாபா பிளாக் ஷீப்’ படப்பிடிப்பில் நடிகை அபிராமி ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். இத்திரைப்படத்தில், மிகவும் உணர்ச்சிகரமான ஒரு காட்சி இருக்கிறது. அந்தக்காட்சியில், அவரது நடிப்பினை பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவினரும், கண்கலங்கியபடி கை தட்டினர். ரசிகர்கள் இந்தக் காட்சியை திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் உணர்ச்சி வசப்படுவது நிச்சயம்.
நடிகை அபிராமியுடன், அயாஸ் நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, மதுரை முத்து, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது, என்றார்.