விஷமக்காரன் – விமர்சனம்!

லைஃப் கோச்சிங் தொழிலில் மிகவும் பிரபலமானவர் ஹீரோ ‘வி’. தம்பதிகளுக்குள் ஏற்படும் எல்லாவிதமான சிக்கல்களையும் தீர்த்துவைப்பதில் வல்லவர். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமுமே மற்ற ஒருவரின் சூழ்ச்சி, விருப்பப்படியே நடக்கிறது. தானாக எதுவும் நடப்பதில்லை என்ற கருத்தில் சற்றும் விலகாதவர்.

அவரிடம் தன்னுடைய தோழி ஒருவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு பிரச்சனைக்கு தீர்வு தேடி வருகிறார் அனிக்கா விக்ரமன். இந்த சந்திப்பின் போது ‘வி’ க்கும் அனிக்கா விக்ரமனுக்கும் காதல் ஏற்படுகிறது. அந்த காதல் திருமணத்தில் முடிந்து, வாழ்க்கை சந்தோஷமாக போகிறது..

இந்நிலையில் ‘வி’யின்  முன்னாள் காதலி சைத்ரா ரெட்டி அவரை சந்திக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கும் அவர் ‘வி’ யிடம் நட்புடன் பழகி வருகிறார். இதனால் அவர்களது நட்பு மீண்டும் காதலாகி விடுமோ என அச்சம் கொள்கிறார் ‘வி’ யின் மனைவி அனிக்கா விக்ரமன். இதன் மூலம் ஏற்படும் சம்பவங்களை சுவாரஸ்யம் கலந்த டிவிஸ்டுகளோடு திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார், இயக்குனர்.

படம் தொடங்கியது முதல் முடியும் வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அது சில காட்சிகளில் கடுப்பேற்றுகிறது. ஆனால் சில இடங்களில் ரசிக்கவும் முடிகிறது.

லைஃப் கோச்சிங் வல்லுனர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கொள்கிறார் ‘வி’. பொருத்தமான தேர்வு. அதேபோல் இரண்டு கதாநாயகிகளான அனிக்கா விக்ரமன், சைத்ரா ரெட்டி இருவரும் தேவையான நடிப்பினை கொடுத்ததோடு பெரிதாக குறை வைக்கவில்லை. கிளு கிளுப்பான காட்சிகள் வைப்பதற்கு திரைக்கதையில் இடமிருந்தாலும் தவிர்த்து இருக்கிறார், இயக்குனர். ஏன்?!

வி, சைத்ரா ரெட்டி, அனிக்கா விக்ரம் இவர்கள் மூவரை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. இருப்பினும் பெரிதாக சலிப்பில்லை! படம் முழுக்க, முழுக்க ஆங்கில வசனங்கள். பார்ப்பது தமிழ்ப்படமா, ஆங்கிலப்படமா என சந்தேகம் ஏற்படுகிறது.

க்ளைமாக்ஸில் மர்ம முடிச்சுக்கள் அவிழும் போது படத்தின் குறைகள் காணாமல் போகிறது. படத்தின் தலைப்பு மிகச்சரி!

விஷமக்கார கண்ணன்… பொல்லாத விஷமக்கார கண்ணன்….

நாழிக் கொரு லீலை செய்யும்.. விஷமக்காரக் கண்ணன்…