ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும்  காரணம் – இயக்குநர் VJ கோபிநாத்!

வெங்கட்பிரபு- சிம்பு கூட்டணியில் ‘மாநாடு’ என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது.  அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது.

கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..  இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.

ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்து கொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பது தான் முதல் பாகத்தின் கதை.

இந்த தொடர்பியல் விதி அத்துடன் முடிந்து விட்டதா, இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில் தான் இந்த  இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா..? அதன்மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின,? அதையெல்லாம் நாயகன் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்து அதை சரி செய்தாரா? என்பதை ஜீவி2-வில்  சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குநர் VJ கோபிநாத்.

இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகக் காரணமான சுவராஸ்யமான சூழல் குறித்து கோபிநாத் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது..

“ஜீவி” படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்காக ஒரு கதை எழுதி அவரிடம் ஒப்புதலும் வாங்கி இருந்தேன்.. ஆனால் கடந்த இரண்டு வருட காலத்தில் கொரோனா தாக்கம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.  ஏற்கனவே தான்  நடித்து வந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தாமதமாக, அதற்குள் சின்னதாக ஒரு படம் பண்ணிவிட்டு வந்து விடுங்களேன் எனக் கேட்டுக்கொண்டார் விஷ்ணு விஷால். அப்போது தான் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் என்னிடம், நீங்கள் ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்குங்கள் எனக் கூறினார்.. ஆனால் இரண்டாம் பாகத்திற்கான எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் முதல் பாகத்தை உருவாக்கி இருந்தோம்..

கதாசிரியர் பாபு தமிழிடம் இந்த இரண்டாம் பாக ஐடியா பற்றி சொன்னபோது, நிச்சயமாக இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பே இல்லை..

அதிலும் உடனடியாக கதை உருவாக்குவதற்கான சாத்தியமும் இல்லை எனக் கூறிவிட்டார்.. ஆனால் தயாரிப்பாளர் கார்த்திகேயன் விடாப்பிடியாக என்னை உற்சாகப்படுத்தவே, அவரிடம் 15 நாட்கள் அவகாசம் கேட்டு, ஆனால் இரண்டே நாட்களில் இந்தப்படத்தின் கதையை எழுதி முடித்தேன் என்கிறார் ..கோபிநாத்.

இயக்குநர் VJ கோபிநாத் ஜீவி-2 படத்திற்கான கதையை சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார் என செய்திகள் பரவ ஆரம்பிக்கவே., எதிர்பாராத விதமாக “மாநாடு” படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கைகளுக்கு இந்த படம் சென்றது.

முதல் பாகத்தில் நடித்த வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு என அனைவருமே இந்தப்படத்திலும் தொடர்கிறார்கள்.  படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.