பிரபல ஐடி நிறுவனத்தில், லட்சங்களில் சம்பளம் வாங்கும் டீம் லீடராக பணிபுரிகிறார், ஷில்பா மஞ்சுநாத். அவர் தனது சக தோழிகளான அனன்யா மணி, சாஷ்வி பாலா, சுபப்பிரியா மலர் ஆகியோருடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மது உள்ளிட்ட பல போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவது இவர்களது வாடிக்கை.
ஒருநாள் கிட்டத்தட்ட சுய நினைவை இழந்த நிலையில், ஷில்பா மஞ்சுநாத்ஹும் அவரது சக தோழிகளும் கடத்தப்படுகிறார்கள். ஒரு பாழடைந்த இடத்தில் கைவிலங்கிட்டு அடைத்து வைக்கப்பட்ட நிலையில், நட்டி நட்ராஜ் அவர்களை தொடர் சித்ரவதை செய்து வருகிறார். இந்த சித்ரவதையின் போது தப்பிச்செல்ல நினைக்கும் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். போதைப்பிடியில் சிக்கிய இவர்கள், ‘சைக்கோ’ நட்டி நட்ராஜின் பிடியிலிருந்து தப்பித்தார்களா, இல்லையா? என்பதே ‘வெப்’ படத்தின் கதை.
வெப், ஐடி இளைஞர், இளைஞிகளுக்கான ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாக இருக்க வேண்டும் என தயாரித்த, இயக்கிய இயக்குநருக்கு பாராட்டு. ரசிகர்களை கவர்வதற்கு கவர்ச்சியை பயன்படுத்திய இயக்குநர், திரைக்கதையை சுவாரசியப்படுத்துவதில் தவறிவிட்டார். படமாக்கிய விதத்தில் சற்றே ஏமாற்றம்.
ஐடியில் வேலை செய்யும் இளைஞிகளாய் நடித்துள்ள அனன்யா மணி, சாஷ்வி பாலா, சுபப்பிரியா மலர் ஆகியோர் கவர்ச்சி உடையில் ரசிகர்களை பரவசப்படுத்துகிறார்கள். அதிலும், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கும் ஷில்பா மஞ்சுநாத், இளைஞர்களை சுண்டி இழுக்கிறார். நட்டியிடம் சிக்கித்தவிக்கும் காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். இவர்கள், பப்பில் கலாட்டா செய்யும் காட்சிகளில், பெங்களூரு ஐடி பெண்களை நினைவூட்டுகின்றனர். கதாபாத்திரத்திற்கான கட்சிதமான தேர்வு.
பெண்களை கடத்தி சித்ரவதை செய்பவராகவும், டாக்டராகவும் நட்டி நட்ராஜ், கதாபாத்திரத்திற்கேற்ப மாறுபட்ட நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
சிரிக்க வைப்பதற்காக வரும், மொட்டை ராஜேந்திரன் ரசிகர்களை கதற வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப்பின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளை கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறது. இரவு நேரக்காட்சிகளையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
கார்த்திக் ராஜாவின் இசை, அய்யோ! பல இடங்களில் பின்னணி இசை, மியூசிக் லைப்ரரியில் இருந்து உருவப்பட்டுள்ளது!?
ஐடி துறையில் இருந்தால், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். என, தங்களுக்குள்ளே கட்டுப்பாடின்றி திரியும் இளைஞர், இளைஞிகளுக்கான விழிப்புணர்வு, இந்தப்படம்.
நல்ல மெசேஜை முன்னுருத்தி, ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தினை கொடுக்க முனைந்துள்ளார், இயக்குநர் ஹாரூன். ஆனால், இடைவேளைக்கு முன்னர் வரை என்ன நடக்கிறது, என்பது தெரியாமல் ரசிகர்கள் விழி பிதுங்கி, இடைவேளைக்கு பிறகு தெரிந்து கொள்வது, ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விடுகிறது!