விஜய்க்கு வழிவிடுவாரா? சிலம்பரசன்!

தமிழக முதலமைச்சரை அண்மையில் சந்தித்த விஜய், ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 13ஆம் தேதி  வெளியாவதை முன்னிட்டு தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி கோரி முறையிட்டதை தொடர்ந்து தமிழக அரசு 100% பார்வையாளர்களுக்கு பொங்கல் முதல் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

மாஸ்டர் படத்துடன் சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் படமும் ஜனவரி 14ஆம் தேதி  வெளியாவதால் திரையுலகினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசின் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதலின் படி 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு மத்திய அரசின் உள்துறை எதிர்ப்பு  தெரிவித்து, தமிழக அரசின் உத்தரவை மறுபரிசீலணை செய்யவும் அறிவுறுத்தியது.

மேலும் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில வழக்குகளும் போடப்பட்டுள்ளது. இதனால், மாஸ்டர், ஈஸ்வரன்  இரண்டு படக்குழுவினரும் கலக்கம் அடைந்துள்ளனர்..

மத்திய அரசின் கொரோனா பெருந்தொற்று பரவல் வழிகாட்டுதலின் படி, 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றால் மீண்டும் 50% இருக்கையுடன் தியேட்டர்கள் செயல்படும்.

இதனால் மாஸ்டர், ஈஸ்வரன்  இரண்டு படத்துக்குமே சரியான வசூல்  கிடைக்காது. எனவே மிகபெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் படத்தினை முதலில் வெளியிட்ட பின்னர், 3 வாரங்கள் கழித்து ஈஸ்வரன் படத்தினை வெளியிடலாம் என்றும் ஈஸ்வரன் படம் வெளியாகும் போது மற்றப்படங்களை வெளியிடாமல் இருக்கவும் திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு சிலம்பரசனும் ஈஸ்வரன் படக்குழுவினரும் ஏற்றுகொள்வார்களா? என்பது இன்னும் சிலநாட்களில் தெரிந்துவிடும்!