‘வில்’ – விமர்சனம்!

Foot Steps Production மற்றும் Kothari Madras International Limited ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம், வில். கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் S. சிவராமன். முக்கிய கதாபாத்திரங்களில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலக்கியா நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – TS பிரசன்னா. இசையமைப்பாளர் – சௌரப் அகர்வால்.

செல்வந்தர் ஒருவர் தனது மகன்களுக்கு சொத்துக்களை பங்கிட்டு, ‘உயில்’ எழுதி வைத்ததோடு இன்னொரு பெண்ணுக்கும் எழுதி வைத்து விடுகிறார். அவரது மகன்களுக்கு அந்தப்பெண் யாரென்று தெரியவில்லை. இதனால், உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் இவர் தான், என ஒரு பெண்ணை, நீதிபதி சோனியா அகர்வால் முன் நிறுத்துகிறார்கள். சந்தேகமடையும் சோனியா அகர்வால், வழக்கின் உண்மைத் தன்மையை விசாரிக்கும்படி, சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்துக்கு அறிவுறுத்துகிறார். விக்ராந்த், உயிலில் எழுதப்பட்டிருக்கும் பெண்ணைத்தேடி கண்டுபிடிப்பது தான் கதை.

நீதிபதியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கோர்ட்டின் அரங்கும், அங்கு நடக்கும் காட்சிகளும் உண்மைத் தன்மையுடன் இருப்பது படத்தின் பலம் என்றால், நீதிபதியாகவே மாறிப்போயிருக்கும் சோனியா அகர்வால் இன்னொரு பலம். கதாபாத்திரதிற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

கதையின் முக்கியாம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அலக்கியா, அழுத்தமான கதாபாத்திரத்தில் முழுமையான அர்ப்பனிப்புடன் நடித்திருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விக்ராந்த், அந்த கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

தொழிலதிபர், அவரது மகன்களாக நடித்திருப்பவர்கள் உட்பட, சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் ஈடுபாட்டுடன் நடித்திருப்பது தெரிகிறது.

சோனியா அக்ர்வாலின் தம்பி, செளரப் அகர்வால் தான் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் ஒளிப்பதிவு பாராட்டும்படி இருக்கிறது.

நீதிமன்றம் உள்ளிட்ட காட்சிகளை விறுவிறுப்பாக பயணிக்க, கவனம் செலுத்தியிருக்கிறார், படத்தொகுப்பாளர் ஜி.தினேஷ்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சிவராமன், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ஒரு வழக்கு இன்னொரு குற்றப்பின்னணிக்கு செல்லும் வகையில், வழக்கை நீதிபதி கையாளும் விதம் ஆகியவை படத்தை ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார்.

‘வில்’ – மோசமில்லை!