‘வித் லவ்’ படக்குழுவின் வித்தியாச விளம்பரம்!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடித்துள்ள திரைப்படம், வித் லவ். வருகிற 6 ஆம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படக்குழுவினர், பல வகைகளில் இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில், 250 ட்ரோன்களைக் கொண்டு பிரம்மாண்டமான டிரோன் ஷோ நடத்தினர். அதன் மூலம் வித் லவ் படத்தின் தலைப்பு மற்றும் அதில் பங்கு பெற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களின் பெயர்களை, வானில் வண்ண எழுத்துக்கள் மூலம் தோன்றச் செய்தனர். இது கடற்கரைக்கு வந்த பொதுமக்களிடையே ஆச்சர்யத்தையும், வரவேற்பையும் பெற்றது. கடற்கரைக்கு வந்த காதலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

வித் லவ் படத்தின், இந்த வித்தியாசமான விளம்பரம் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு, பேசப்பட்டு வருகிறது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் கனிசமாக உயர்த்தியிருக்கிறது.

வித் லவ் திரைப்படத்தில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்திருக்க, அனஸ்வரா  ராஜன் நாயகியாக நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.