‘வித் லவ்’ – (விமர்சனம்!) மெமரிஸ்!

வித் லவ் திரைப்படத்தை, ‘ஜியோன் பிலிம்ஸ்’ மற்றும் ‘எம் ஆர் பி என்டர்டைன்மென்ட்’ சார்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியிருக்கிறார். இதில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக அறிமுகமாக, அவருடன் அனஸ்வரா ராஜன், சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணா, தேனி முருகன், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

வித் லவ் திரைப்படத்தினை இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவகையில், கலகலப்பாக வடிவமைத்திருக்கிறார், இயக்குநர் மதன். திருச்சியில் நடக்கும் சம்பவங்களாக இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அநேகமாக பள்ளிப்படிக்கும் விடலைப்பருவத்தில் தான் பலருக்கும் முதல் காதல் உருவாகியிருக்கும். முதல் காதலை புரிந்து கொள்வதற்கு முன்னரே அந்தக்காதல் கைகூடாமலோ, அல்லது விரும்பியவர்களிடம் தெரிவிக்க முடியாமலோ போயிருக்கும் அப்படியான ஒரு காதல் கதையை தனது முதல் படத்திலேயே கலகலப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் மதன். எப்படியிருக்கிறது?

நாயகன் அபிஷன் ஜீவந்திற்கு, அவருடைய வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள். ஒரு நாள், அபிஷன் ஜீவந்தின் அக்கா R.J. ஆனந்தி, மணப்பெண் அனஸ்வரா ராஜனை சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அபிஷன் ஜீவிந்தும், அனஸ்வரா ராஜனும் சந்தித்து தங்களது கருத்துக்களையும், விருப்பங்களையும் தெரியபடுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனம் விட்டு பேசிய பின்னர், இருவரும் ஒரே பள்ளியில் படித்திருப்பது தெரிய வருகிறது. அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜனின் சீனியர். பள்ளி படிக்கும் காலத்தில், இருவரும் வெவ்வேறு நபர்களை காதலித்தததையும் பகிர்ந்து கொள்கின்றனர். அதன் பிறகு, பள்ளியில் படிக்கும் போது ஏற்பட்ட காதலை சம்பந்தப் பட்டவர்களிடம் தெரிவிக்க முயற்சி செய்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், விடலைப் பருவத்து காதல் கலாட்டாக்களை சொல்லும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், பக்கா ஹீரோ மெட்டீரியல். ஆடல், பாடல், ஃபைட் என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். கலகலப்பான சிரித்த முகம். வயதிற்கேற்ற துறுதுறுப்பு. என, ரசிகர்களை எளிதில் கவரும் ஒரு ஹீரோவாக, கோலிவுட்டில் உதித்திருக்கிறார். விடலை, மற்றும்  வாலிபப்பருவம் என இருவேறு காலக்கட்டத்திற்கான நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அனஸ்வராராஜன் குறித்து அழுதபடியே அக்கா R.J. ஆனந்தியின் கையை பிடித்தபடி அழும் காட்சியிலும், பள்ளியில் செய்யும் குறும்புத்தனமான காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். விரைவில் பிஸியான ஹீரோவாக வலம் வருவது நிச்சயம்.

அனஸ்வரா ராஜனின், அழகும், நடிப்பும் இளைஞர்களை கவர்ந்திழுக்கிறது. படம் முழுவதுமே கலகலப்பாக வலம் வருகிறார். குறிப்பாக பள்ளிப்படிக்கும் காலத்தில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்துகிறார். எக்ஸ் லவ்வரிடம் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் வசீகரித்து விடுகிறார்.

காவ்யா அனிலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான நடிப்பினை வெளிப்படுத்தி, திரைக்கதையின் நகர்வுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

மற்றபடி, பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், அபிஷன் ஜீவிந்த் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், அக்காவாக நடித்திருக்கும் R.J. ஆனந்தி, ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, டிம்பிள் கண்ணா ஆகியோரும் கதாபாத்திரத்திற்கேற்றபடி, சிறப்பான பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசையில் குதூகலமான பாடல்களும், எனர்ஜெடிக்கான பின்னணி இசையும் படத்தின் காட்சிகளை வேகப்படுத்துகிறது.

ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கான பலம்.

பள்ளிப்பருவத்தில் ஏற்படும் முதல் ஈர்ப்பினை மய்யமாக கொண்டு, முதல் காதலையும், சொல்லமுடியாமல் போன காதலையும், இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில், ஒரு கலகலப்பான படமாக உருவாகியிருக்கிறது, ‘வித் லவ்’.

‘வித் லவ்’  –  மெமரிஸ்!