‘ரைட்டர்’ : விமர்சனம்.

நீலம் புரடக்‌ஷன்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், ஜெட்டி புரடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் பா.ரஞ்சித், அபை ஆனந்த் சிங், ஃபியூஷ் சிங், அதிதி ஆனந்த் ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், ‘ரைட்டர்’.

இப்படத்தின் மூலம் பா.ரஞ்சித்தின் உதவியாளர் ஃப்ராங்க்ளின் ஜாக்கப் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். சமுத்திரக்கனி, ஹரிகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இனியா, லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், சுப்ரமணிய சிவா, ஜி.எம்.சுந்தர், கவிதா பாரதி, கவின் ஜெ பாபு, திலீபன், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, போஸ் வெங்கட் ஆகியோர் உடன் நடித்து இருக்கிறார்கள்.

மனிதாபிமானம் கொண்ட நல்ல மனிதர் (சமுத்திரக்கனி) தங்கராஜ். இவர், திருச்சி எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் ரைட்டராக வேலைசெய்து வருகிறார். காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் உரிமைகளை பெற, ‘காவலர் நலச் சங்கம்’ அமைப்பதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார். இது காவல் உயரதிகாரிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அவர் சென்னைக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்படுகிறார்.

சென்னையில் டெபுடி கமிஷனரின் நேரடி பார்வையில் பி.ஹெச்.டி ஆய்வு மாணவர் (ஹரி கிருஷ்ணன்) மீது ‘சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனால் ‘ரைட்டர்’ தங்கராஜ் மாணவருக்கு உதவ முன் வருகிறார். இதன்பிறகு நடக்கும் சஸ்பென்ஸ், க்ரைம், டிராமா தான் ‘ரைட்டர்’ படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

அறிமுக இயக்குனர் ஃப்ராங்க்ளின் ஜாக்கப், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்ந்தெடுத்து நல்ல இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். சமுத்திரக்கனி, கவிதா பாரதி, கவின் ஜெ பாபு, திலீபன், போஸ் வெங்கட் எல்லோருமே போலீஸ் கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள். அதுபோலவே ‘சேவியர்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுப்ரமணியம் சிவா, உள்ளிட்ட பலரும் சிறிய கதாபாத்திரங்களாக தோன்றினாலும் அனைவரும் முரணில்லா நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள்.

‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி கதாபாத்திர வடிவமைப்பு அப்பட்டமான அக்மார்க்! திருடனுக்கும் போலீஸுக்கும் உள்ள உறவினை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

உயரதிகாரி போஸ் வெங்கெட் கண்ணத்தில் அறைந்தவுடன் சமுத்திரக்கனியின் முகத்தில் தோன்றும் பாவனைகள் பல வலிமை மிக்க வசனங்களாக பிரதிபலிக்கிறது.

போலீஸிடம் சிக்கிய ஹரி கிருஷ்ணனின் கதறல் இன்னும் வேறுசில இடங்களில் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இதுவும் காவல்துறையின் மறுக்க முடியாத ஒரு பக்கம்.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கான இன்னொரு தூண்.

போலீஸ் பவரும், ஜாதி வெறியும் ஒன்னா சேர்ந்த என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சின்ன உதாரணம்.

தமிழ் சினிமாவில் பல பல போலீஸ் படங்கள் வந்திருந்தாலும்,  ‘ரைட்டர்’ தனித்துவமாக இருக்கும்.

இந்தப்படத்தின் காட்சி வடிவமைப்பு, காவல் நிலையத்திற்குள் வைக்கப்பட்ட கேமிராவின் ஒளிப்பதிவினை போல் இருக்கிறது. அந்த அளவிற்கு நேர்த்தி.! போலீஸில் பணியாற்றியவர்கள் நிச்சயமாக பங்கு பெற்றிருக்க வேண்டும் என்றே தெரிகிறது.

முதல் படத்திலேயே முன்னணி வரிசையில் இடம்பிடித்துள்ளார், இயக்குநர் பிராங்ளின் ஜாக்கப்.

பா.ரஞ்சித்தின் இன்னுமொரு தரமான படைப்பு ரைட்டர்!