‘பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்’ (Breaking Point Pictures) நிறுவனம் தயாரித்து, எம்.கோபி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், ‘யாதும் அறியான்’. இப்படத்தில், அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்க, நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்த் பாண்டி, ஷ்யாமள், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தினேஷ், பிரானா, ஆனந்த் பாண்டி, ஷ்யாமல் ஆகிய நண்பர்கள், அடர்ந்த காட்டுப்பகுதியிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்குகின்றனர். அங்கே மேனேஜராக இருக்கும் அப்புக்குட்டி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறார். ஆட்டம் பாட்டத்துடன் இரவு நெருங்குகிறது.
தினேஷ், பிரானாவுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறார். முதலில் மறுக்கும் பிரானா பின்னர் சம்மதிக்கிறார். இருவரும் நெருக்கமாகின்றனர். ஆசுவாசமாக சிகரெட் பிடிக்க வெளியே வருகிறார், தினேஷ். சிறிது நேரம் கழித்து பிரானவை எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால், பிராணா பிணமாகக்கிடக்கிறார். கூச்சலிட்ட நண்பர்களை அழைத்து விஷயத்தை சொல்கிறார். இதன்பின்னர் என்ன நடந்தது என்பது தான், ‘யாதும் அறியான்’ படத்தின் குழப்பமான, சுவாரசியமற்ற திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
அறிமுக நாயகன் தினேஷ், நடிக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்…, முடியவில்லை! காதலும் வரவில்லை. வில்லத்தனமும் வரவில்லை. இயக்குநர் அவரை நடிக்க வைக்க முயற்சித்தாரா, இல்லையா? என்றும் தெரியவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் பிரானா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமள், ரிசார்ட் மேனேஜராக நடித்திருக்கும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்?!
ஒளிப்பதிவாளர், எல்.டி . இசையமைப்பாளர், தர்ம பிரகாஷ். இயக்குநர், எம்.கோபி.
‘யாதும் அறியான்’ – சுவாரசியமற்ற குழப்பவாதி!